Published : 15 Oct 2018 11:05 AM
Last Updated : 15 Oct 2018 11:05 AM

மலேசியாவிலும் ஆதார்: இந்தியாவை பின்பற்ற முடிவு

அரசின் அனைத்து திட்டங்களுக்கும், சலுகைகளுக்கும் ஆதார் கட்டாயம் என வலியுறுத்தப்பட்டதை எதிர்த்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டன. தவிர பான் எண், வங்கிக் கணக்கு, மொபைல் எண் போன்றவற்றுக்கும் இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. இவற்றை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, உச்ச நீதிமன்றம்  விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான் என்று தீர்ப்பளித்தது. அதேசமயம் அதன் பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும் ஆதார் தொடர்பாக பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் மக்களிடம் நிலவி வருகின்றன. ஆனால் ஆதார் பயன்பாட்டால் போலியான நபர்கள் ஒழிக்கப்பட்டு மானியங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதாக மத்திய அரசு வாதிட்டு வருகிறது.

இந்தநிலையில் மலேசிய அரசும் தங்கள் நாட்டில் ஆதாரை பயன்படுத்த ஆலோசித்து வருகிறது. அந்நாட்டில் ஏற்கெனவே தேசிய அடையாள அட்டை குடிமக்களுக்கு உள்ளது. மைகாட் என்ற பெயரிலான இந்த அட்டையில் ஆதார் போன்று கைரேகை மற்றும் விழித்திரை எடுக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.

மலேசிய குழுவினர் அண்மையில் இந்தியா தரப்பில் ஆதார் தொடர்பான தகவல்களை கேட்டு பெற்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.  இதுகுறித்து மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், குலசேகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘மலேசியாவிலும் ஆதார் போன்ற அட்டையை வழங்க ஆலோசித்து வருகிறோம். இதன் மூலம் மானியங்கள் உரிய நபர்களை சென்றடைவதை உறுதி செய்ய முடியும். மலேசிய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது’’ எனக் கூறியுள்ளார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x