Published : 27 Oct 2018 11:26 AM
Last Updated : 27 Oct 2018 11:26 AM

சவுதிக்கு ஆயுத ஏற்றுமதி நிறுத்தப்படும்: ஜெர்மனி

ஜமால் மரணம் தொடர்பாக  முழு விவரம் கிடைக்கும்வரை சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது நிறுத்தப்படும் என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெர்மனியின் பிரதமர்  ஏஞ்சலா மெர்க்கல்  கூறும்போது, ”இந்த கொடூரமன கொலையின் பின்னணி குறித்து அறிவது அவசியம். ஜமாலின் மரணம் குறித்த  முழு விவரம் கிடைக்கும்வரை சவுதிக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்வது நிறுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜமாலின் மரணம் தொடர்பாக, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் சவுதி எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில்  சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தவர் ஜமால்.

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.

இது தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது.

துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி சமீபத்தில் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து ஜமால் கொல்லப்பட்டத்தை சவுதி ஒப்புக் கொண்டது.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் சவுதிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x