Last Updated : 29 Oct, 2018 03:35 PM

 

Published : 29 Oct 2018 03:35 PM
Last Updated : 29 Oct 2018 03:35 PM

ஊழல் வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 ஆண்டு சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

ரூ.28 ஆயிரம் கோடி ஊழல் செய்த வழக்கில் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியக் கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டுச் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

ஏற்கெனவே ஒரு ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை பெற்று கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சிறை கம்பிகளுக்குப் பின்னால் வாழ்ந்து வரும் கலிதா ஜியாவுக்கு இந்த வழக்கின் தீர்ப்பும் இடியாக இறங்கியுள்ளது.

வரும் டிசம்பர் மாதம் வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அடுத்தடுத்த வழக்குகளில் கலிதா ஜியாவுக்கு தண்டனை கிடைத்திருப்பது அவரின் ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (வயது 73) மறைந்த தனது கணவர் பெயரில் ஜியாவுர் ரஹ்மான் பெயரில் அறக்கட்டளை தொடங்கி இருந்தார். அந்த அறக்கட்டளைக்கு ஆதாரங்கள் இல்லாத வகையின் மூலம் 3.75 லட்சம் டாலர் (ரூ.28 ஆயிரம் கோடி) பணத்தை தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, கலிதா ஜியா பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 2011-ம் ஆண்டு ஜியா அறக்கட்டளை ஊழல் வழக்கை வங்கதேச ஊழல் கண்காணிப்பு ஆணையம் தொடர்ந்து விசாரிக்கத் தொடங்கியது. இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, ஜியாவின் முன்னாள் அரசியல் விவகாரத்துறை செயலாளர் ஹாரிஸ் சவுத்ரி, முன்னாள் உதவியாளர் ஜியாவுல் இஸ்லாம் முன்னா, தாக்காவின் முன்னாள் மேயர் சாதீக் ஹூசைன் கோகா, தனிச் செயலாளர் மோனிருல் இஸ்லாம் கான் ஆகியோர் முக்கியக் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தாக்காவில் உள்ள பழைய மத்திய சிறைச்சாலையில் தற்காலிக நீதிமன்றம் அமைக்கப்பட்டு அதில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி அக்தர்ருஸ்மான் இன்று தீர்ப்பளித்தார்.

அந்தத் தீர்ப்பில் ஜியா அறக்கட்டளைக்கு ஆதாரங்கள் இல்லாத வகையில், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ரூ.28 ஆயிரம் கோடி சொத்துகள் சேர்த்து கலிதா ஜியா ஊழல் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

மேலும், கலிதா ஜியாவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஹாரிஸ் சவுத்ரி, முன்னாள் உதவியாளர் ஜியாவுல் இஸ்லாம் முன்னா, தாக்காவின் முன்னாள் மேயர் சாதீக் ஹூசைன் கோகா, தனிச் செயலாளர் மோனிருல் இஸ்லாம் கான் ஆகியோரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

ஆனால், இந்த வழக்கு அரசியல் பழிவாங்கும் எண்ணத்துடன், காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்டுள்ளது என்று வங்கதேச தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக, இந்த வழக்கின் தீர்ப்பை அறிவிக்கக் தடை கோரி கலிதா ஜியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் கலிதா ஜியா தொடர்பான வழக்கில் தீர்ப்பளிக்க எந்த விதமான தடையும் நீதிமன்றத்துக்கு விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x