

இந்தோனேசியாவில் சுனாமி தாக்கியதில் பலு நகரில் காணாமல் போன 1000 பேர் சேற்றில் புதைந்து இறந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சுலாவேசி தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை, சுனாமி தாக்கியது. இதில் பலியானோர் எண்ணிக்கை 1,500-ஐத் தாண்டியுள்ளது.
இந்தோனேசியாவில் சுலேசியா தீவில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பெரும்பாலான வீடுகள், கடலோரத்தில் இருந்த பெரிய அளவிலான குடியிருப்புகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரை மட்டமாகியுள்ளன. அந்த நகரில் வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்புப் பணியில் ராணுவத்தினரும், போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
சுனாமி தாக்கியதில் நகரிலிருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில் பலு நகரில் பலரோ மற்றும் பெடோபோ பகுதிகளில் காணாமல் போனவர்களில் 1000 பேர் அங்குள்ள 3 மீட்டர் ஆழமுள்ள சேற்றில் புதைந்து இறந்திருக்கலாம் என்று இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை செய்தித் தொடர்பாளர் ஸ்டோபோ புர்வோ தெரிவித்திருக்கிறார்.
அவர்களில் 74 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதியுள்ளவர்களை மீட்க மீட்புப் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.