Published : 31 Oct 2018 11:20 AM
Last Updated : 31 Oct 2018 11:20 AM

"ஜமால் கொலையை மூடி மறைக்காதீர்கள் ட்ரம்ப்"

ஜமால் கொலையை மூடி மறைக்காதீர்கள் என்று அவரது தோழியான ஹட்டிஸ் சென்ஜிஸ் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சாடியுள்ளார்.

லண்டனில் நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹட்டிஸ் சென்ஜிஸ் ஜமால் கொலை விசாரணை குறித்துப் பேசும்போது, ”ஜமால் கொலை குறித்து உண்மை வெளியே வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  உதவ வேண்டும். ஜமாலின் கொலையை மூடி மறைக்காதீர்கள். நமது மதிப்பையும், மனசாட்சியையும் பணத்தைக் கொண்டு சமரசம் செய்யாதீகள். ஜமாலுக்கு நீதி வழங்க வேண்டும். ஜமாலைக் காண்பது அன்றுதான் இறுதி என்று தெரிந்திருந்தால் அவரது சிரிப்பை ஒருமுறை பார்த்திருப்பேன். ஜமாலுக்குப் பதிலாக  நான் தூதரகத்துக்குச் சென்றிருக்க வேண்டும்” என்றார்.

துருக்கியைச் சேர்ந்த ஹட்டிஸ் சென்ஜிஸ்ஸை, ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில் இம்மாதத் தொடக்கத்தில் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்ற ஜமால் மாயமானார்.

இது தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது.

துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி சமீபத்தில் குற்றம் சாட்டியது.

இதனைத் தொடர்ந்து ஜமால் கொல்லப்பட்டத்தை சவுதி ஒப்புக் கொண்டது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் சவுதிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஜமால் கொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

சம்பவம் நடந்த துருக்கியில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்நாடு கூறி வருகிறது. ஆனால் இந்த கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x