Published : 28 Oct 2018 08:35 AM
Last Updated : 28 Oct 2018 08:35 AM

உலக மசாலா: எடையை குறைக்க ஒரு சவால்!

இங்கிலாந்தில் ஓர் உடற்பயிற்சியாளர், தன்னுடைய வாடிக்கையாளருக்கு உணவு வழங்க வேண்டாம் என்று போஸ்டர் அடித்து மிடில்ஸ்ப்ரக் பகுதி முழுவதும் ஒட்டியிருக்கிறார்! மைக் ஹின்ட் இங்கிலாந்தின் மிக வெற்றிகரமான உடற்பயிற்சியாளர். ஒரு வாடிக்கையாளருக்குப் பயிற்சியளிக்க ஆரம்பித்தால், ஓராண்டுவரை அவரைக் கவனித்து, உடலைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார். கடந்த ஆண்டு சிறப்பான உடற்பயிற்சியாளர் என்ற விருதையும் வென்றிருக்கிறார். இவரிடம் உடற்பயிற்சி எடுத்துக்கொண்டு, உடல் இளைக்க ஏராளமானவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து சிலரை மட்டும் தேர்வு செய்து, பயிற்சியளிப்பது இவரது வழக்கம். இந்த ஆண்டு 27 வயது டிப்ஸியைத் தேர்ந்தெடுத்தார். இவரது உடல் எடை 254 கிலோ!

சமீபத்தில் இவருக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப் பெற்று வந்திருக்கிறார். மருத்துவர்கள், உணவுக் கட்டுப்பாடு

இல்லாவிட்டால் மரணத்தைத் தவிர்க்க முடியாது என்று கூறிவிட்டனர்.

‘உணவுக் கட்டுப்பாடு அல்லது மரணம்’ என்ற இரு வாய்ப்புகளைத் தவிர டிப்ஸிக்கு வேறு வழியில்லை. அதனால் மைக்கிடம் உடல் எடை குறைக்க விண்ணப்பித்தார். இவரை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, எடை குறைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார் மைக். பயிற்சியின் முதல் கட்டமாக, உள்ளூர் உணவகங்களில் ‘டிப்ஸியைக் காப்பாற்றுங்கள். உடல் எடை இவரைக் கொன்றுவிடும்.

உணவு கேட்டால் கொடுக்காதீர்கள்’ என்று தானும் டிப்ஸியும் இருக்கும் படத்தையும் போட்டு போஸ்டர்களை ஒட்டி வைத்துவிட்டார். பசி எடுத்தால் மைக் ஆரம்பித்திருக்கும் ஆரோக்கியமான உணவகத்துக்குச் சென்று, அவர் குறிப்பிடும் உணவுகளையும் அளவோடுதான் சாப்பிட வேண்டும். ”இந்த உணவு பொதுமக்களுக்குக் கிடைக்காது. என்னிடம் பயிற்சி பெறுபவர்களுக்காகவே அவர்களின் உடல் நலத்துக்கு ஏற்ப, சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கிறது. டிப்ஸி தினமும் 11 ஆயிரம் கலோரி உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். தற்போது 3,500 கலோரியாக இது குறைந்துவிட்டது. இதில் 2 ஆயிரம் கலோரியை உடற்பயிற்சி மூலம் எரித்துவிடுகிறார். இவருக்கு ஏற்ற உடற்பயிற்சி சாதனங்களைத் தனியாக உருவாக்க வேண்டியிருந்தது. உடற்பயிற்சி செய்யும்போது இதயத் துடிப்பைக் கவனித்துக்கொண்டே இருப்போம். டிப்ஸியின் முகத்தில் சிறிய மாற்றம் தெரிந்தாலும் பயிற்சியை நிறுத்தி ஓய்வு கொடுத்துவிடுவோம். என் வாழ்க்கையில் இவரது எடை குறைப்பு மிகவும் சவாலானது. ஓராண்டுக்குள் டிப்ஸியின் உடலைக் குறைத்து, சிறந்த உடற்பயிற்சியாளர் என்று மீண்டும் நிரூபிப்பேன்” என்கிறார் மைக் ஹின்ட்.

டிப்ஸி பிறந்ததில் இருந்து ஒல்லியாக இருந்ததில்லை. 18 வயதில் தந்தையை இழந்தபோது, மன அழுத்தத்துக்குச் சென்றுவிட்டார். அதற்கு வைத்தியம் செய்தபோது நிறைய மாத்திரைகளைச் சாப்பிட வேண்டியிருந்தது. அந்த மாத்திரைகளால் அடிக்கடி பசி உண்டாக, விதவிதமான உணவுகளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட ஆரம்பித்தார். எடை எங்கோ சென்றுவிட்டது. துணி எடுத்து தைத்துதான் போட முடியும். விமானத்தில் இரண்டு இருக்கைகளில்தான் உட்கார முடியும். வேலை கிடையாது. திருமணமும் ஆகவில்லை. உடல் எடை குறைத்த பிறகுதான் பிற விஷயங்களைச் செய்ய முடியும் என்று காத்திருக்கிறார் டிப்ஸி. 

இந்தச் சவாலில் இருவரும் ஜெயிக்க வாழ்த்துகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x