Published : 23 Oct 2018 04:06 PM
Last Updated : 23 Oct 2018 04:06 PM

"தலையைக் கொண்டு வா": ஸ்கைப் மூலம் ஜமாலைக் கொல்ல ஆணையிட்ட சவுதி இளவரசர்

பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட வேண்டும் என்ற ஆணையை சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஸ்கைப் மூலம் உத்தரவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி இளவரசர் அவரது சவுதி அரசுத் துறையில் பல பதவிகள் வகிக்கும் ஊடகத் துறை ஆலோசகரான அல் கவுடானி மூலம் இந்த உத்தரவை வழங்கி இருக்கிறார் என்று துருக்கி அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதில், துருக்கி அனுப்பிய 15 பேருக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் ஊடகத்துறை ஆலோசகரான அல் கவுடானிதான் ஜமாலைக் கொல்ல உத்தரவு பிறப்பித்திருக்கிறார். ஜமாலைத் தாக்கிய பிறகு  ”அவரின் தலையைக் கொண்டு வா” எனக் கூறும் அல் கவுடானியின் குரல் ஆடியோவில் பதிவாகியுள்ளதாகவும் இந்த உத்தரவை இளவரசர் சல்மான் ஸ்கைப் மூலம் தெரிவித்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜமால் கொலை தொடர்பாக  கடந்த சனிக்கிழமை சவுதி அரசர் சல்மான்,  இளவரசரின் ஊடக ஆலோசகர் அல் கவுடானி உட்பட நான்கு பேரைப் பதவியிலிருந்து நீக்கியது.

மேலும் சவுதி அரசோ ஜமால் கொல்லப்பட்டதில் இளவசரருக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்றும், இது தொடர்பான நியாயமான விசாரணை நடந்து வருவதாகவும் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

பதவி நீக்கப்பட்ட அல் கவுடானி , ''நான்  யாருடைய அனுமதி இல்லாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.  நான் எனது கடவுளான அரசர் சல்மானுக்கு இளவரசர் முகமது பில் சல்மானுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்'' என்று தெரிவித்தார்.

இந்த ஆடியோ ஆதாரத் தகவலை தற்போது துருக்கி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில்  சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தவர் ஜமால்.

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.

இது தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது.

துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி சமீபத்தில் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து ஜமால் கொல்லப்பட்டத்தை சவுதி ஒப்புக் கொண்டது.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் சவுதிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x