Published : 23 Oct 2018 04:24 PM
Last Updated : 23 Oct 2018 04:24 PM

தூங்கினால் பரிசு: நாள்தோறும் 6 மணிநேரம் உறங்கும் ஊழியர்களுக்கு ரூ.50 ஆயிரம்; ஜப்பான் நிறுவனம் புதிய யுக்தி

ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம், தனது ஊழியர்கள் நாள்தோறும் இரவு நேரத்தில் 6 மணிநேரம் தூங்கினால் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக புதிய பரிசுகளை அறிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டு மக்கள் இரவில் தூங்கும் நேரம் குறைந்து, சமூக ஊடகங்களில் அதிகமாகக் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், மறுநாள் காலையில் அவர்களால் பணியில் கவனத்துடன் ஈடுபடமுடியவில்லை, இதனால் நிறுவனங்களில் உற்பத்தியும், வேலையும் பாதிக்கிறது. இதைத் தடுக்கும் முயற்சியில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள கிரேஸி இன்டர்நேஷனல் எனும் திருமணங்களை நடத்திவைக்கும் நிறுவனம் இந்தத் திட்டத்தை தங்களின் ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, ஊழியர்களின் செல்போனில் ஒரு ஆப்ஸ் பதிவேற்றம் செய்யப்படும். இந்த ஆப்ஸை ஊழியர்கள் ஆன்-செய்து வைத்துத் தூங்கும்போது, அந்த ஆப்ஸ் தூங்கும் ஊழியர்களைக் கண்காணிக்கும். நாள் ஒன்றுக்கு இரவில் 6 மணிநேரம் தூங்கும் ஊழியர்களுக்கு ஊக்கப்புள்ளிகள் பரிசாக அளிக்கப்படும். இந்த ஊக்கப்புள்ளிகள் மூலம் நிறுவனத்துக்கு சொந்தமான கேண்டீனில் ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம் வரை சாப்பிட்டுக்கொள்ள முடியும். அல்லது பணமாக பெற்றுக்கொள்ள முடியும்.

இது குறித்து கிரேஸி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சிஇஓ கசுஹிகோ மோரியாமோ கூறுகையில், ஒரு நிறுவனத்துக்கு அதில் பணியாற்றும் ஊழியர்கள்தான் சொத்து. அவர்கள் உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும். ஆனால், இன்று ஜப்பானில் 90 சதவீதம் 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் சமூக ஊடகங்களில் லயித்து இரவு தூக்கத்தை தொலைத்து விடுகின்றனர். இதனால் மறுநாள் வேலைக்கு வரும் ஆர்வத்துடன் பணியில் ஈடுபடுவதில்லை. இதனால் உற்பத்தி பாதிக்கிறது.

இதைத் தடுக்கவும், ஊழியர்களின் உடல்நலனைப் பாதுகாக்கவும் இந்தத் திட்டத்தை கொண்டுவந்துள்ளோம். இதன்படி எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நாள்தோறும் இரவில் 6 மணிநேரம் தூங்க வேண்டும். தொடர்ந்து எங்கள் ஊழியர்களை ஒரு ஆப்ஸ் கண்காணிக்கும். ஊழியர்கள் நாள்தோறும் 6 மணிநேரம் தூங்கும்பட்சத்தில் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம்(570 டாலர்) வெகுமதியாகத் தரப்படும். அல்லது கேண்டீனில் சாப்பிட்டுக்கொள்ள முடியும்.

தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாப்பது அவசியமாகும், இல்லாவிட்டால், நாடு பலவினமடைந்துவிடும். ஊழியர்கள் தூங்குவதற்கு ஊக்கத்தொகை அளிப்பது மட்டுமல்ல, சிறந்த சத்துள்ள உணவு, உடற்பயிற்சிகள் செய்யவும் அறிவுறுத்துகிறோம், மேலும், அலுவலகத்தில் எப்போதும் அன்பான,மகிழ்ச்சியான சூழல் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறோம். மேலும், விடுமுறை நாட்களில் ஊழியர்களைச் சுற்றுலாவுக்கும் அழைத்துச் செல்கிறோம் என்று தெரிவி்தார்.

ஜப்பானில் சமீபத்தில் அதிகமான வேலைப்பளு, மற்றும் பணிநெருக்கடி காரணமாகப் பல ஊழியர்கள் திடீரென உடல்நலக்குறைவால் இறந்தனர். இதையடுத்து ஜப்பானில் தொழிலாளர் பராமரிப்பு சட்டத்தில் பல்வேறு கிடுக்கிப்பிடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x