

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இருவரில் ஒருவர். இராக்கில் மயிலை கடவுளாக வணங்கும் யஸிதி இனப் பெண். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் பாலியல் (செக்ஸ்)அடிமையாக சிக்கி, பல இன்னல்களை அனுபவித்தவர். கடந்த 2014ஆகஸ்ட் மாதம் வட இராக் பகுதியில் உள்ள கோச்சோ கிராமத்தில் இருந்து கடத்தப்பட்டவர். தீவிரவாதிகளின் தாக்குதலில் தனது6 சகோதரர்களையும் தாயையும் இழந்தவர். இவர் தனது அனுபவங்களை ‘தி லாஸ்ட் கேர்ள்: மை ஸ்டோரி ஆப் கேப்டிவிட்டி அண்ட் மை பைட்எகெய்ன்ஸ்ட் தி இஸ்லாமிக் ஸ்டேட்’ என்ற சுயசரிதை மூலம் உலகறியச் செய்தவர். அதிலிருந்து சில பக்கங்கள்…
அப்பாவி யஸிதி மக்களைத் தாக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள், பெண்களை செக்ஸ் அடிமையாக இழுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். ஐஎஸ் அமைப்பு அதை ஊக்குவித்தது. இந்த செக்ஸ் அடிமைகளை விற்பதற்கும் இந்த அமைப்பே சந்தைகளை நடத்தியது. செக்ஸ் ஆசையைக் காட்டியே தீவிரவாத அமைப்பில் பலரை சேர்த்தது. ‘டபிக்’ என்ற தனது பிரச்சார இதழில், ஐஎஸ் இயக்கத்தில் சேர்பவர்கள் பெண்களை செக்ஸ் அடிமைகளாக வைத்துக் கொள்ளலாம் என ஆசை காட்டியது. உலக வரலாற்றில் போரின் முக்கிய ஆயுதமாக பலாத்காரம் இருந்து வந்துள்ளது. அந்த ஆயுதத்துக்கு நானே பலிகடா ஆவேன் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
அடிமைகளை விற்கும் சந்தை எப்போதுமே இரவில்தான் தொடங்கும். ஐஎஸ் தீவிரவாதிகள்தான் இதை நடத்துவார்கள். கைதியாக பிடித்து வரும் யஸிதி இளம் பெண்களை ஏலம் விடுவார்கள். நாங்கள் மாடியில் அடைக்கப்பட்டிருந்தோம். கீழே ஏலத்தில் கலந்து கொள்பவர்களின் பெயர்களை தீவிரவாதிகள் ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொண்டிருந்தார்கள். முதல் ஆள் உள்ளே நுழைந்ததுமே அங்கிருந்த பெண்கள் அனைவரும் அலறத் தொடங்கினார்கள். ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது. பல பெண்கள் பயத்தில் வாந்தி எடுத்தார்கள். ஒருவர் மீது ஒருவர் விழுந்தார்கள். ஆனால் இதையெல்லாம் தீவிரவாதிகள் பொருட்படுத்தவே இல்லை. ஒவ்வொருவராய் உள்ளே வந்து ஆடு, மாடுகளைப் போல் எங்களை பார்வை யிட்டார்கள். அழகான பெண்களிடம் வயதை விசாரித்தனர்.
அமைதியாக இருங்கள் என தீவிரவாதிகள் சத்தமிட்டனர். பயத்தில் அழுகுரல் சத்தம் அதிகரிக்கத்தான் செய்தது. என்னைத் தொட வந்தவனின் கையைத் தட்டி விட்டேன். பயத்தில் ஓவென கூச்சலிட்டேன். எல்லா பெண்களுமே அதைத்தான் செய்தனர். அப்போது, சல்வான் என்ற ஐஎஸ் தீவிரவாதி என்னருகில் வந்தான். அவனுடன் இன்னொரு பெண் இருந் தாள். அவள் போரடித்து விட்டதால், அங்கே விட்டுவிட்டு இன்னொரு பெண்ணை கூட்டிச் செல்வதுதான் அவனது நோக்கம். என்னை எழுந் திருக்கும்படி கத்தினான். நான் படுத்தபடியே இருந்தேன். காலால் எட்டி உதைத்தான். அவன் என் கண்களுக்கு அரக்கன் போலவே தெரிந்தான். என்னை ஏலம் எடுத்த அவன் (சல்வான்) மிருகம் போல இருந்தான். என்னதான் போராடினாலும் இவன் கையால்தான் நமக்கு சாவு என நினைத்தேன். அவன் மீது அழுகிய முட்டை வாசம் வந்தது.
தரையைப் பார்த்தபடியே சல்வா னுடன் நடந்தேன். அப்போது, மிகவும் மெலிந்த ஒரு ஜோடி கால்களைப் பார்த்தேன். அந்தக் கால்களில் விழுந்து, ‘தயவுசெய்து என்னை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்..’ என அவனிடம் கெஞ்சினேன். ‘என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்.. இந்த அரக்கனிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்..’ எனக் கதறினேன். ‘இவள் என்னுடையவள்.. விட்டுவிடு…’ என சல்வானிடம் அந்த ஒல்லி ஆள் கூறினான். சல்வான் ஒன்றுமே சொல்லவில்லை. ஒல்லி ஆள் மோசுல் நகரத்தின் நீதிபதி. அதனால் அவனை யாருமே பகைத்துக் கொள்ள தயாராக இல்லை. அவனை பின்தொடர்ந்தேன். ‘உன் பெயர் என்ன..’ என அவன் கேட் டான். ‘நாடியா’ என்றேன். டெஸ்க்கில் இருந்த தீவிரவாதி, நாடியா – ஹாஜி சல்மான் என குறித்துக் கொண்டான். ஹாஜி சல்மான் பேரைக் கேட்டதும் அந்தத் தீவிரவாதியே பயந்ததுபோல் இருந்தது. அப்போதுதான் தவறு செய்து விட்டோமோ என்ற பயம் எனக்குள் எழுந்தது.
ஐஎஸ் தீவிரவாதிகளிடம் ஓராண்டும் 3 மாதமும் கொடுமையை அனுபவித்த பிறகு ஒருவழியாக அங்கிருந்து தப்பி ஜெர்மனிக்கு சென்றேன். 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜெர்மனியில் இருந்து ஸ்விட்சர்லாந்து சென்றேன். அங்குதான் முதன்முறையாக ஐ.நா. அமைப்பில் சிறுபான்மையினர் பிரச்சினை தொடர்பாக பேச இருந்தேன். ஐஎஸ் தீவிரவாதிகளிடம் சிக்காமல் தப்பியோடியபோது, தாகத்தில் நாக்கு வறண்டு செத்துப்போன எங்கள் இன சிறுமிகள் குறித்தும் மலைப் பகுதிகளில் சிதறுண்டு போய்க் கிடக்கும் குடும்பங்கள் குறித்தும் பிணைக் கைதிகளாக இருக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் குறித்தும் பேச விரும்பினேன்.
பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான யஸிதி மக்களில் நானும் ஒருத்தி. என் சமூகம் இராக்கிலும் ஐஎஸ் பிடியில் இருக்கும் கோச்சோவிலும் சிதறிக் கிடக்கிறது. எங்கள் இனத்துக்கு நடக்கும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எங்களின் கோச்சோ கிராமம் இன்னமும் ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில்தான் இருக்கிறது.
இராக்கில் வசிக்கும் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடம் தேவை. இனப்படுகொலையில் ஈடுபட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஹாஜி சல்மான் பற்றியும் அவன் என்னை பாலியல் பலாத்காரம் செய்தது பற்றியும் பேச விரும்பினேன். உண்மையாக இருக்க வேண்டும் என்ற எனதுமுடிவுதான் நான் எடுத்த முடிவுக ளிலேயே மிகவும் கடினமானது.
மேடையில் நான் பேச ஆரம்பித்தேன். கோச்சோ கிராமத்தை ஐஎஸ் தீவிரவாதிகள் வேட்டையாடியதையும் என்னைப் போலவே பலரையும் செக்ஸ் அடிமைகளாக கடத்திப் போனதையும் பேசினேன். நான் சீரழிக்கப்பட்டதையும் தினமும் சித்ரவதை அனுபவித்ததையும் சொன்னேன். என் சகோதரர்கள் கொல்லப்பட்டதையும் விவரித்தேன். போர்வைக்குள் சுருண்டு படுத்திருக்கும் என் மீது ஹாஜி சல்மான் சாட்டையால் விளாசியதையும் வலி தாங்க முடியாமல் கதறி துடித்ததையும் யாராவது உதவி செய்ய மாட்டார்களா என ஏங்கித் தவித்ததையும் சொன்னேன்.
என்னுடைய அனுபவம்தான், தீவிர வாதத்துக்கு எதிரான என்னுடைய ஆயுதம். அத்தனை ஐஎஸ் தீவிர வாதிகளும் தண்டிக்கப்படும்வரை என் ஆயுதத்தை பயன்படுத்துவேன். உலகத் தலைவர்கள் குறிப்பாக, முஸ்லிம் தலைவர்கள் இதுபோன்ற கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். உலகம் முழுவதும் இருக்கும் நசுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற அது உதவும். என்னை கொடுமைக்கு ஆளாக்கியவனை நேருக்கு நேர் பார்க்க விரும்புகிறேன். அவன் தண்டிக்கப்படுவதையும் பார்க்க ஆசைப்படுகிறேன். எல்லாவற்றையும் விட இதுபோன்ற கொடுமைகளை அனுபவித்த கடைசிப் பெண்ணாக இருக்கவே நான் விரும்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இராக்கில் இருந்து கடத்தப்பட்ட நாடியா முராட், ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி, 2015-ம் ஆண்டு தொடக்கத்தில் அகதியாக ஜெர்மனியில் தஞ்சம் புகுந்தார். கடந்த ஆண்டு முதல் ஆள் கடத்தலுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.