

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி கொல்லப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தவர் பத்திரிகையாளர் ஜமால்.
இந்த நிலையில் துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், இரு வாரங்களுக்கு முன்னர் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஜமாலை சவுதி கொன்றுவிட்டதாக துருக்கி குற்றம் சாட்டியதுடன் இந்த வழக்கு தொடர்பான சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பட்டியலை வெளியிட்டு அதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டது.
ஆனால், துருக்கியின் இந்தக் குற்றச்சாட்டை சவுதி தொடர்ந்து மறுத்து வந்தது. தங்கள் மீது உலக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சவுதி கூறியது.
ஜமாலை சவுதி அரேபியா அனுப்பிய நபர்கள் 7 நிமிடங்கள் அவரைக் கொடூரமாக சித்ரவதை செய்து, விரலைத் துண்டித்து கொலை செய்திருப்பதாக துருக்கி புதிய புகாரை தெரிவித்தது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டிருப்பதாக நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரம்ப் கூறும்போது, "ஜமால் கொல்லப்ட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். இந்த வழக்கு அவ்வாறே தெரிகிறது. இது நிச்சயம் வருத்தப்படக் கூடிய செய்தி.
ஒருவேளை சவுதி தலைவர்கள் ஜமாலை கொலை செய்ய உத்தரவிட்டிருந்தால் இதற்கான கடுமையான விளைவுகளை சவுதி சந்திக்கக் கூடும்" என்று தெரிவித்துள்ளார்.