

இஸ்லாமாபாத் பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்துள்ளது. நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளதால், எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கானுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் நவாஸ் முன்வந்துள்ளார். பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படி ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.
பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றிபெற்றுள்ளார். ஆகவே, அவர் பதவி விலக வேண்டும் எனக் கோரி முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் வலியுறுத்தி வருகிறார்.
இதைப் போராட்டமாக முன்னெடுத்துள்ள இம்ரான் கான், மதத் தலைவர் தாஹிர் உல் காத்ரி ஆகியோர் பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ம் தேதி லாகூரிலிருந்து இஸ்லாமாபாத்துக்கு பேரணியைத் தொடங்கி போராட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
தற்போது, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைந்துள்ளனர். நாடாளுமன்றம், பிரதமரின் இல்லம் உட்பட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதி, உயர் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்து விட்டனர். நாடாளுமன்றத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
சமாதானப் பேச்சு
இதனிடையே, இம்ரான் கானைச் சந்திக்க நவாஸ் முன்வந்துள்ளார். இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் காவாஜா சாத் ரபீக், தனது ட்விட்டர் தளத்தில் “நாட்டின் நலனுக்காக இம்ரான் கானை நவாஸ் ஷெரீப் சந்திக்கவுள்ளார்” என பதிவிட்டுள்ளார்.
அதேசமயம் இச்சந்திப்பின் நேரம் குறித்து அவர் விவரம் எதுவும் குறிப்பிடவில்லை. வாக்குப்பதிவு விவரங்களைத் தணிக்கை செய்ய இம்ரான் கானுக்கு பிரதமர் அனுமதி அளிப்பார் என நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 342 இடங்களில் 190 இடங்களை நவாஸின் பிஎம்எல் (என்) கட்சி பிடித்தது. இம்ரான் கானின் கட்சி 34 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, புதன்கிமை காலை நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு திரண்டிருந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் இம்ரான் கான் பேசும்போது, “நவாஸ் ஷெரீப் பதவி விலகாவிட்டால், பிரதமரின் இல்லத்துக்குள் நுழைவோம்” என்றார்.
ராணுவம் தலையிடுகிறது
இப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. உயர் பாதுகாப்புப் பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ள நிலையில், அவர்களை அமைதிகாக்கும்படி ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் அசிம் சலீம் பாஜ்வா, “இப்போது அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டியது அவசியம். தேசம் மற்றும் மக்களின் நலன் கருதி அர்த்தம்பொதிந்த பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். தலைநகரின் உயர் பாதுகாப்புப் பகுதி, தேசத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. அந்த இடத்தின் பாதுகாப்பை ராணுவம் ஏற்றுள்ளது. ஆகவே, அப்பகுதியின் புனிதத்தன்மைக்கு அனைவரும் மரியாதை அளிக்க வேண்டும்” என தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
காத்ரி ஆவேசம்
நாடாளுமன்ற வளாகத்துக்கு முன் கூடியிருந்த போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய தாஹிர் உல் காத்ரி, “இன்று நாடாளுமன்றத்துக்கு வந்துள்ள எம்.பி.க்களை வெளியேற விடாமல் சிறைப்பிடியுங்கள்” என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அப்படி ஏதும் நடைபெறவில்லை. பிரதமர் நவாஸ் ஷெரீப் பாதுகாப்பாக வெளியேறி தனது இல்லத்தை அடைந்தார்.