Last Updated : 02 Oct, 2018 04:02 PM

 

Published : 02 Oct 2018 04:02 PM
Last Updated : 02 Oct 2018 04:02 PM

2018-ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு: லேசர் பிசிக்ஸ் பிரிவில் புதுமை செய்த அமெரிக்கா, பிரான்ஸ், கனடா விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

ஸ்வீடனில் உள்ள நோபல் பரிசுக்குழுவினர் 2018-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை அமெரிக்கா, பிரான்ஸ், கனடா விஞ்ஞானிகளுக்கு அறிவித்துள்ளனர்.

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கிக் கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு புற்றுநோய் சிகிச்சையில் ‘இம்யூன் செக் பாயிண்ட் தெரபி’ (நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை) என்ற பாதைத்திறப்புக் கண்டுபிடிப்பைச் செய்ததற்காக அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி ஜேம்ஸ் பி.அல்லிசன், மற்றும் ஜப்பானின் டசூகு ஹோஞ்சோ ஆகியோருக்கு 2018-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இயற்பியலுக்கான நோபல் பரிசை ஸ்வீடன் நோபல்பரிசுக் குழுவினர் இன்று அறிவித்தனர். லேசர் பிசிக்ஸ் பிரிவில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளைச் செய்த அமெரிக்க இயற்பியலாளர் ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி ஜெரார்டு மோரோ, கனாடா நாட்டின் பெண் விஞ்ஞானி டோனா ஸ்டிரிக்லான்ட் ஆகியோருக்குக் கூட்டாக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணாடி இழையில் (ஆப்டிகல் டீஸர்ஸ்) புதிய கண்டுபிடிப்புகளைச் செய்ததற்காக அமெரிக்க இயற்பியலாளர் ஆர்தர் ஆஷ்கினுக்கு நோபல் பரிசின் பாதித் தொகை வழங்கப்பட்டது.

கனடா நாட்டு பெண் விஞ்ஞானி டோனா ஸ்டிரிக்லான்ட், பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி ஜெரார்டு மோரா ஆகியோருக்கு லேசர் கற்றை மிக, மிக, நுண்ணிய அளவில் உருவாக்கியதற்காக  பாதியளவு பரிசு வழங்கப்பட்டது.

இந்த 3 விஞ்ஞானிகளும் கண்டுபிடித்த லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் எதிர்காலத்தில் உலகில் கோடிக்கணக்கான மக்களுக்கு எளிதாகக் கண் அறுவைசிகிச்சை செய்ய முடியும். அதற்கான தொழில்நுட்பத்தையும் எளிதாக உருவாக்கலாம்.

இதில் பெண் விஞ்ஞானியான ஸ்டிரிக்லாண்ட் கனடாவில் உள்ள ஆன்டாரியோ நகரில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 1963-ம் ஆண்டில் மரியா ஜோபர்ட்டுக்கு பின் எந்தப் பெண் விஞ்ஞானிக்கும் இயற்பியலில் நோபல் பரிசு வழங்கப்படவில்லை. ஏறக்குறைய 55 ஆண்டுகளுக்குப் பின் இயற்பியல் பிரிவில் பெண் விஞ்ஞானியான ஸ்டிரிக்லாண்டுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது குறித்து ஸ்டிரிக்லாண்ட் கூறுகையில், ''அரை நூற்றாண்டுக்குப்பின் இயற்பியல் துறையில் பெண் விஞ்ஞானி ஒருவருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது கொண்டாடப்பட வேண்டியது. பெண்கள் சாதிப்பதற்கான நேரம் தொடங்கிவிட்டது. இனி நம்பிக்கையுடன் மிக வேகமாக முன்னோக்கிச் செல்ல வேண்டும். பெண்ணாக எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது பெருமையாக இருக்கிறது'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x