

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஆகஸ்ட் 1 முதல் 3 மாதங்களுக்கு ராணுவத்திடம் அந்நாட்டு அரசு ஒப்படைத்துள்ளது. இம்ரான் கட்சியின் அரசுக்கு எதிரான போராட்ட அறிவிப்பு காரணமாக சர்ச்சைக்குரிய இம் முடிவை அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்துறை அமைச்சர் நிசார் அலி கான், கடந்த வாரம் இதற்கான அறிவிப்பை வெளி யிட்டார். “பாகிஸ்தான் அரசியல் சட்டப் பிரிவு 245-ன் கீழ் ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் இறுதிவரை இஸ்லாமாபாத்தில் ராணுவம் நிலைகொண்டிருக்கும்” என்றார் அவர்.
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், “முதல் கட்டமாக முக்கிய அரசு அலுவல கங்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிற இடங்களின் பாதுகாப்பை ராணுவம் ஏற்கும். 5 கம்பெனி ராணுவ வீரர்கள் இப்பணியில் ஈடுபடுவார்கள்” என்றன.
தலைநகரைப் போன்று படிப்படியாக பிற நகரங்களின் பாதுகாப்பையும் ராணுவத்தின் வசம் அரசு ஒப்படைக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த விவகாரத்தை முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி, நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை எழுப்பியது.
நவாஸ் ஷெரீப் ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்துள்ள நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளை அவரது அரசு நிறைவேற்றத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அரசுக்கு எதிராக இஸ்லாமாபாத் நோக்கி, வரும் 14-ம் தேதி மிகப்பெரிய பேரணி நடத்தப்போவதாக, இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாப் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தலைநகரின் சட்டம் ஒழுங்கை காக்கும் பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்கண்ட அரசியல் சட்டப் பிரிவு 245-ன் கீழ் தலைநகரில் பேரணிக்கும் தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க் கப்படுகிறது.