

வட அமெரிக்க நாடான ஈக்வெடாரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 பேர் பலியாகினர். தலைநகர் கொய்டோ மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.58 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் சுமார் 20 வினாடிகள் நீடித்தது. வீடுகள், கட்டிடங்கள் பலமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.
நிலநடுக்கத்தால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். மேலும் 3 பேர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என கருதி, தலைநகரைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கொய்டோ விமான நிலையத்தையும் அதிகாரிகள் மூடினர்.
நிலநடுக்கத்துக்கு பிந்தைய அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பசிபிக் கடலின் பூகம்ப அபாய பகுதியில் ஈக்வெடார் அமைந்துள்ளது. அதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.