Published : 28 Aug 2018 11:03 AM
Last Updated : 28 Aug 2018 11:03 AM

மெக்கெயின் மரண அஞ்சலியில் ட்ரம்ப் அடாவடி: அரைக்கம்பத்தில் பறந்த அமெரிக்க தேசியக்கொடியை முழுக்கம்பத்தில் ஏற்றி குழப்பம்

அமெரிக்காவில் ஆளும் குடியரசு கட்சியின் மூத்த தலைவரான மறைந்த ஜான் மெக்கெயின் மரணத்துக்கு அந்நாட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டுவரும் நிலையில், அவர் மீதான காழ்புணர்ச்சியால், அதிபர் ட்ரம்ப், தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு பின், முழுக்கம்பத்தில் ஏற்றி குழப்பம் ஏற்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாம் போரில் சிறை சென்றவரும், அமெரிக்க அதிபர் பதவிக்கு இருமுறை போட்டியிட்டவரும், அரிசோனா மாநில செனட் உறுப்பினருமான ஜான் மெக்கெயின் (வயது 81) உடல்நலக்குறைவால் காலமானார்.

ஜான் மெக்கெயினுக்கு மூளைப் புற்றுநோயான கிளிபோஸ்டோமா எனும் நோய் கடந்த 2017 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மரணமடைந்தார்.

அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான போரின்போது, வியட்நாம் ராணுவ அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட கடற்படை அதிகாரியான மெக்கெயின் 5 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அமெரிக்காவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான மெக்கெயின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரது இறுதிச்சடங்கு செப்டம்பர் 2-ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெக்கெயினும், அதிபர் ட்ரம்ப்பும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். எனினும் கடந்த காலங்களில் பல்வேறு விவகாரங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல்கள் நடந்துள்ளன.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தபோது, ட்ரம்பை மெக்கெயின் கடுமையாக விமர்சித்தார். குடியரசுக் கட்சி வேட்பாளராக ட்ரம்ப் நிறுத்தப்படுவதற்கு மெக்கெயின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, மெக்கெயின் போர் நாயகன் எல்லாம் இல்லை. அவர் ஒரு மோசடி நபர்’’ என அவரை கடுமையாக தாக்கி ட்ரம்ப் பேசினார்.

இந்நிலையில் மெக்கெயின் மறைவயொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அதிபரின் வெள்ளை மாளிகை, அந்நாட்டு நாடாளுமன்றம், ராணுவ தலைமையகமான பென்டகன், உச்ச நீதிமன்றம் போன்ற இடங்களில் உடனடியாக அமெரிக்க தேசியகொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

ஆனால் மெக்கெயின் மீது இருந்த அதிருப்தி மற்றும் முன் பகையால் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடக்கூடாது என அதிபர் ட்ரம்ப் திடீரென உத்தரவிட்டார். இதனால் நேற்று முன்தினம் தேசியக்கொடிகள் அனைத்தும் முழுக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ட்ரம்ப் சார்ந்த குடியரசு கட்சி மட்டுமின்றி எதிர்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்களும் கடுமையாக விமர்சித்தனர். சமூகவலைதளங்களிலும் ட்ரம்புக்கு எதிராக பல்வேறு தரப்பினனும் விமர்சனங்களை பதிவிட்டனர்.

இதையடுத்து வேறு வழியின்றி ட்ரம்ப் இறங்கி வந்துள்ளார். மெக்கெயினுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘அமெரிக்காவின் வளர்ச்சிக்கு, மெக்கெயின் ஆற்றியுள்ள சேவைகளை மதிக்கிறேன். அவரது உடல் அடக்கம் செய்யப்படும் வரை அமெரிக்க தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்’’ எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து மெக்கெயினுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அமெரிக்க தேசியகொடிகள் மீண்டும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x