Published : 21 Aug 2018 08:06 AM
Last Updated : 21 Aug 2018 08:06 AM

கடலில் 10 மணி நேரம் தத்தளிப்பு; பாட்டு, யோகாவால் உயிர்ப் பிழைத்தேன்: இங்கிலாந்து பெண் பரபரப்பு பேட்டி

கப்பலில் இருந்து கடலில் விழுந்த இங்கிலாந்து பெண், 10 மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.

வர்கரோலா துறைமுகத்தில் இருந்து இத்தாலி நாட்டின் வடகிழக்கில் உள்ள வெனிஸ் நோக்கி நார்வே பயணிகள் கப்பல் ஒன்று கடந்த சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. கிழக்கு ஐரோப்பிய நாடான குரோஷிய நாட்டு அட்ரியாட்டிக் கடல் பகுதியில் கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலில் இங்கிலாந்தைச் சேர்ந்த கே லாங்ஸ்டேப் (46) என்ற பெண்ணும் பயணம் செய்து கொண்டிருந்தார். சனிக்கிழமை மாலை உணவருந்திய பிறகு தவறி கடலில் விழுந்து விட்டார்.

கப்பல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. அதன்பிறகு நள்ளிரவில்தான் லாங்ஸ்டேப் காணாமல் போனதை கப்பல் அதிகாரிகள் அறிந்தனர். உடனடியாக குரோஷியாவில் உள்ள அவசரகால மீட்புப் படையினருக்குத் தகவல் அனுப்பினர். இதையடுத்து குரோஷிய கடலோர காவல் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விமானத்திலும் தேடி வந்தனர். 10 மணி நேரத்துக்குப் பிறகு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த லாங்ஸ்டேப்பை உயிருடன் மீட்டனர்.

உயிர்ப் பிழைத்த லாங்ஸ்டேப், குரோஷியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘‘கப்பலின் பின்புறத்தில் இருந்து கடலில் தவறி விழுந்துவிட்டேன். கடல் தண்ணீர் மிகவும் சில்லிட்டிருந்தது. அப்போது பாட்டுகள் பாடிக் கொண்டும், யோகா செய்து கொண்டும் இருந்தேன். அதனால் உயிர்ப் பிழைத்தேன். இன்று நான் உயிருடன் இருப்பது எனது அதிர்ஷ்டம்’’ என்றார்.

இவர் இங்கிலாந்தின் விர்ஜின் அட்லான்டிக் தனியார் விமான நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடலில் இருந்து பயணிகள் யாரும் தவறி கடலில் விழாத அளவுக்குதான் பாதுகாப்பு அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, லாங்ஸ்டேப் கப்பலில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது அவராக கடலில் குதித்தாரா என்பது தெரியவில்லை என்று கூறுகின்றனர். இதுகுறித்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்படும் என்று குரோஷிய அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

மீட்புப் படையினர் கூறும்போது, ‘‘கடலில் இரவு நேரத்தில் தேடுவது, வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது போன்றது. எனினும் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து விட்டோம். இது அதிர்ஷ்டம்தான்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x