Published : 08 Aug 2014 07:50 PM
Last Updated : 08 Aug 2014 07:50 PM

காஸாவில் 4 லட்சம் குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பு: யுனிசெஃப்

காஸாவில் போர்ச்சூழல் காரணமாக, சுமார் 4 லட்சம் குழந்தைகள் மன அழுத்தப் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

படுக்கையில் சிறுநீர் கழித்தல், பெற்றோருடன் ஒட்டிக்கொள்ளுதல், அச்சுறுத்தும் கனவால் திடுக்கிட்டு விழித்துக்கொள்ளுதல் என அக்குழந்தைகள் உளவியல் ரீதியில் பெரும் பாதிப்படைந்துள்ளதாக யுனிசெஃப் கூறியுள்ளது.

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, கடந்த மாதம் மட்டும் கிட்டதட்ட 429 குழந்தைகள் உயிரிழந்தனர். அங்கு மொத்தமுள்ள 18 லட்சம் மக்களில் பாதி பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

இது குறித்து யுனிசெஃப் அமைப்பின் பாலஸ்தீன அதிகாரி ஜூனே குனுகி கூறும்போது, "காஸாவில் நடந்த கடந்த மூன்று போர்களில் இதுதான் மிகவும் நீளமான, பயங்கரமான, அழிவுக்கான போராட்டமாக உள்ளது. மனித இறப்பும், பொருள் இழப்பும் வார்த்தைகளால் சொல்ல முடியாதது.

குழந்தைகளின் உடல் நலம் மற்றும் மனநலத்தில் ஏற்பட்டுள்ள காயங்களை ஆற்றுவது மிகக் கடினமான செயல். காஸாவில் சீர்குலைத்துள்ள நிலையை மீண்டும் நிலைநாட்டுவதும் மலைப்பான பணியாகும்" என்றார்.

யுனிசெஃப் திரட்டியுள்ள தகவலின்படி, கிட்டதட்ட 2,744 குழந்தைகள் காயமடைந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. கடுமையாகக் காயமடைந்துள்ள குழந்தைகளுக்குக் காஸாவில் மருத்துவம் பார்க்கும் வசதியில்லை. அதனால், வெளியில் சென்று மருத்துவம் பார்க்கும் கட்டாய நிலையில் உள்ளனர் என்பது வேதனைக்குரிய விஷயம்.

காஸாவில் போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், முன்னதாக 28 நாட்கள் நீடித்த தாக்குதல்களின் விளைவாகக் கிட்டத்தட்ட 65,000 பேர் வீட்டில்லாமல் தவிக்கின்றனர்.

காஸாவில் பொதுமக்களுக்குக் கிடைக்கவேண்டிய அடிப்படை வசதிகளில் மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வசதி, மருத்துவ வசதி, சுகாதார வசதி ஆகியவை மின் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் யுனிசெஃப் குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x