

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உளவுத்துறை மையத்தில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதி தாக்குதல் நடத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், "ஆப்கன் தலை நகர் காபூலில் உள்ள குவலா இ வாசிர் பகுதியில் உளவுத்துறை மையம் உள்ளது. இன்று காலை அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய தீவிரவாதி ஒருவர் தாக்குதல் நடத்தினார். மேலும் அப்பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவமும் நடந்துள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து காபூல் போலீஸார் செய்தித் தொடர்பாளர் ஹஸ்மத் கூறும்போது, "அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தும்போது நாங்கள் உளவுத் துறை கட்டிடத்தில் சிக்கிக் கொண்டிருந்த மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம்.தொடர்ந்து அப்பகுதியில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்" என்றார்.
இத்தாக்குதலுக்கு எந்தத் தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் கல்வி அலுவலகத்தின் அருகே புதன்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 48 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த நிலையில் இன்று இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் அதிரடி நடவடிக்கைகளால் கடந்த 2001-ம் ஆண்டு தலிபான்கள் பிடியில் இருந்து ஆப்கன் விடுவிக்கப்பட்டது. எனினும், ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக பொதுமக்கள், ராணுவத்தினர், போலீஸாரைக் குறிவைத்து தலிபான்கள், ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.