Published : 27 Aug 2018 03:49 PM
Last Updated : 27 Aug 2018 03:49 PM

ட்ரம்ப்பை அட்டைப் படங்களில் தொடர்ந்து விமர்சிக்கும் டைம்ஸ்

தொடர்ந்து விமர்சனங்களுக்கும்,  குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை தனது அட்டைப் படங்கள் மூலம் கடுமையாக விமர்சித்து வருகிறது டைம்ஸ் இதழ்.

கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர். அப்போது டொனால்டு ட்ரம்ப் மீது நடிகைகள் ஸ்ட்ரோமி டேனியல்ஸ், கெரன் மெக்டக்கால் ஆகியோர் பாலியல் புகார் தெரிவித்தனர்.

இரு நடிகைகளும் ட்ரம்ப்புக்கு எதிராக பொது அரங்கில் பேசாமல் இருப்பதற்கு ட்ரம்ப்பின் அப்போதைய வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் பெரும் தொகை கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு இந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது தன் மீதான குற்றச்சாட்டை கோஹன் ஒப்புக்கொண்டார். அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், “வேட்பாளரின் (ட்ரம்ப்) அறிவுறுத்தலின்படி நடிகைகளுக்குப் பணம் கொடுத்தேன்'' என்று தெரிவித்தார்.

வழக்கறிஞர் கோஹனின் இந்த வாக்குமூலம் அதிபர் ட்ரம்ப்புக்கு அரசியல்ரீதியாக பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் எழுந்து வருகின்றது.

இந்த நிலையில் ட்ரம்ப் ஆபத்தில் இருக்கிறார் என்பதை குறிக்கும் வகையில் அமெரிக்காவின் புகழ் பெற்ற இதழான டைம்ஸ் அட்டைப் படம் வெளியிட்டுள்ளது.

— TIME (@TIME) August 23, 2018

 

அதில் ட்ரம்ப்பின் அதிபர் நாற்காலி நீரில் மூழ்கி இருப்பது போன்று, ட்ரம்ப் மேலே நீரில் மிதத்து கொண்டிருப்பது போன்று வடிவமைத்துள்ளது.

இதற்கு முன்னதாக மெக்சிகோ அகதிகளின் மீதான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் செயலைக் கடுமையாக விமர்சித்து  டைம்ஸ் இதழ் அட்டைப் படம் வெளியிட்டது.

மேலும் அமெரிக்க அதிபர் விவகாரத்தில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதைக் குறிக்கும் வகையில் புதின் மற்றும் ட்ரம்ப்பின் உருவப் படங்களை இணைத்து அட்டைப் படம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x