

சவுதி அரேபியாவில் உள்ள ஆண்கள் பாகிஸ்தான், வங்க தேசம், சாட் மற்றும் மியான்மர் ஆகிய நான்கு நாடுகளிலிருந்து பெண்களைத் திருமணம் செய்து கொள்ள சவுதி அரசு தடை விதித்துள்ளது.
இதன் மூலம் தன் நாட்டின் ஆண்கள் வெளிநாட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள் வதைத் தடுக்க சவுதி அரேபியா முயற்சி மேற்கொண்டுள்ளது. மேற்கண்ட நான்கு நாடுகளிலிருந்து சுமார் 5 லட்சம் பெண்கள் சவுதி அரேபியாவில் வசிக்கிறார்கள். இதுகுறித்து மெக்கா காவல் துறை இயக்குநர் அஸ்ஸஃப் அல் குரேஷி கூறியதாவது:
"வெளிநாட்டுப் பெண்களைத் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கும் முன்பு கூடுதலாகச் சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தங்களின் திருமண விண்ணப்பத்தை அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் அனுமதியளித்த பிறகே திருமணம் செய்துகொள்ள விண்ணப்பதாரர் அனுமதிக்கப்படுவார். விண்ணப்பதாரர் 25 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் ஏற்கெனவே திருமணமானவராக இருந்தால் தன்னுடைய மனைவி மாற்றுத் திறனாளி என்றோ அல்லது தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர் என்றோ அல்லது குழந்தைப் பேறு இல்லாதவர் என்றோ நிரூபிக்கும் அறிக்கைகளை மருத்துவமனையில் இருந்து பெற்று வர வேண்டும்". இவ்வாறு அவர் கூறினார்.
சவுதி அரேபியாவில் சுமார் 90 லட்சம் வெளிநாட்டினர் வசிக்கிறார்கள். நாட்டின் மக்கள் தொகையில் இவர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாகும். பெண்களுக்கு உரிய உரிமைகளையும், சமத்துவத்தையும் வழங்காததால் அந்நாடு அதிகம் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.