

இராக்-சிரியா எல்லையில் வசித்து வரும் ஒரு சிறுபான்மை இனம் யாஜிடி இனமாகும். இவர்கள் பண்டைய ஜொராஷ்ட்ரிய மதக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள். இவர்களை ஜிஹாதிகள் "பேயை வழிபடுவர்கள்" என்று வர்ணித்து வந்துள்ளனர்.
சிஞ்சார் பகுதியில் இராக் ஜிஹாதியர்கள் தாக்குதலில் இந்த யாஜிடி இனத்தைச் சேர்ந்த 40 குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஐநா தெரிவித்துள்ளது.
இது குறித்து யூனிசெஃப் பெற்ற தகவல்களின் படி, இராக் ஜிஹாதிகள் தாக்குதல், இடப்பெயர்வு மற்றும் குடிக்க நீர் கிடைக்காமல் இந்த 40 குழந்தைகள் 2 நாட்களில் பலியாகியுள்ளனர்.
குர்திஷ் கட்டுப்பாட்டில் இருந்த வடமேற்கு இராக் ஊரான சிஞ்சாரை இஸ்லாமிய ஸ்டேட் ஜிஹாதியர்கள் ஞாயிறன்று கைப்பற்றினர்.
மேலும் சிஞ்சாரில்தான் ஜிஹாதிகளால் விரட்டியடிக்கப்பட்ட மற்ற சிறுபான்மையினரும் வந்து தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் சிஞ்சார் பகுதியை ஜிஹாதிகள் தாக்கியதில் பலர் வீடுகளை விட்டு அலறியபடி மலைப்பகுதி நோக்கிச் சென்றனர் அங்கு உணவு, குடிநீர் ஆகியவை இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக யூனிசெஃப் தகவல் தெரிவிக்கின்றது.
இதில் சுமார் 25,000 சிறுவர் சிறுமியர் ஊருக்குள் திரும்ப முடியாமல் உணவு, குடிநீர் இல்லாமல் அவதியுற்று வருகின்றனர்.