Last Updated : 09 Aug, 2018 04:11 PM

 

Published : 09 Aug 2018 04:11 PM
Last Updated : 09 Aug 2018 04:11 PM

இந்திய மென்பொறியாளரை இனவெறியுடன் சுட்டுக்கொன்ற அமெரிக்க கடற்படை வீரருக்கு 3 ஆயுள் தண்டனை

 

அமெரிக்காவின் கனாஸ் சிட்டியில் கடந்த 2017-ம் ஆண்டு மதுபான விடுதியில் இந்திய மென்பொறியாளர் சீனிவாஸ் குச்சிபோல்டாவை சுட்டுக்கொன்ற அமெரிக்க கடற்படை வீரருக்கு 3 ஆயுள் தண்டனையை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சீனாவிஸ் குச்சிபோல்டா. இவர் அமெரிக்காவில் கனாஸ் நகரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தனது மனைவியுடன் கனாஸ் நகரில் தங்கி இருந்தார்.

கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி கனாஸ் நகரின் உலாத்தே பகுதியில் உள்ள ஆஸ்டின் மதுபான விடுதிக்கு சீனிவாஸ் தனது நண்பர் அலோக் மதாசனியுடன் வந்திருந்தார். இருவரும் மதுபான விடுதியில் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த கடற்படை வீரர் ஆடம் பூரின்டன் இனவெறியுடன் சீனிவாஸை நோக்கி ஆத்திரமாகப் பேசினார். எங்கள் நாட்டுக்குள் எதற்கு வந்திருக்கிறாய்? உங்கள் நாட்டுக்குப் போ என்று சத்தமிட்டு, தன்னிடம் இருந்த துப்பாக்கியால் குச்சிபோல்டாவை சுட்டுக் கொலை செய்தார். இதைப் பார்த்த மதாசனி, பூரின்டனை தடுக்கப் பாய்ந்த போது அவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் மதாசனி காயத்துடன் உயிர்பிழைத்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த கனாஸ் போலீஸார் ஆடம் பூரின்டனைக் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கும் இருப்பதையும் போலீஸார் அறிந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஆடம் பூரின்டன், இனவெறி, நிறவெறி, ஒருவரின் தேசியத்தைக் குறிப்பிட்டு வெறுப்புடன் பேசியுள்ளார் என்பதும், கொலை செய்தார் என்பதும் உறுதியானது. இதையடுத்து குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தண்டனை விவரங்களை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்றுமுன்தினம் அறிவித்தது. அப்போது, இறுதியாக அமெரிக்க அரசின் அட்டர்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் கூறுகையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள பூரின்டன் ஒருவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் இருந்துள்ளார், 2-வது நபரையும் கொலை செய்ய முயற்சித்துள்ளார். இனம்,நிறம், தேசியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தியரைக் கொலை செய்துள்ளார். ஆதலால், இவருக்கு அதிகபட்ச தண்டனை தர வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சீனிவாஸ் குச்சிபோல்டாவை கொலை செய்த ஆடம் பூரின்டனுக்கு 3 ஆயுள் தண்டனை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆயுள் தண்டனை முடிந்த பின்பும், அடுத்த ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

சீனிவாஸ் குச்சிபோல்டாவின் மனைவி விடுத்த அறிக்கையில்,” என்னுடைய கணவர் சீனிவாஸ் அனைவருக்கும் மதிப்பு அளிக்கக்கூடியவர். பூரின்டன் பொறுமையாகக் கேட்டிருந்தால், அமெரிக்காவின்வளர்ச்சிக்கு பிரவுன் நிறத்தில் இருக்கும் மனிதர்கள் எவ்வாறு பங்களிக்கிறார்கள் என்பதை விளக்கி இருப்பார். சீனிவாசுடன் நான் அமெரிக்காவுக்கு ஏராளமான கனவுகளுடன் நான் வந்தேன்.என்னுடைய கனவுகள் அனைத்தையும் சிதைக்கப்பட்டுவிட்டன என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x