

ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக வங்கி ரூ.1,200 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது. உலக வங்கியின் இந்த நடவடிக்கையை உலக சுகாதார நிறுவனம் வரவேற்றுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினி, லைபீரியா, சியேரா லியோனி ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை சுமார் 900 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதலில் தலைவலி, காய்ச்சலுடன் தொடங்கும் இந்த வைரஸ் தாக்குதல் தீவிரமடையும்போது கடுமையான ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரைப் பறிக்கும். இந்த வைரஸை ஒழிக்க மருந்து ஏதும் இல்லையென்றாலும், முறையாக சிகிச்சை அளிப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி நோயில் இருந்து விடுபட முடியும்.
ஆப்பிரிக்க நாடுகளில் போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் இந்நோயால் அதிகம் பேர் உயிரிழக்கின்றனர்.