

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 381 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், கடுமையான சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணியில் ராணுவம் இறங்கியுள்ளது.
சீனாவின் தெற்கு மேற்குப் பகுதியில் யுன்னான் மாகாணம் உள்ளது. இங்கு லுடியான் நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு 6.5 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 12,000 வீடுகள் முற்றிலும் இடிந்தன; 30,000 வீடுகள் சேதமடைந்தன. நிலநடுக்கம் 12 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க வலையமைவு மையம் தெரிவித்துள்ளது.
நிலஅதிர்வை உணர்ந்ததும் பெரும்பாலான மக்கள் வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தனர். இடிந்து விழுந்ததில் பெரும்பாலான கட்டிடங்கள் பழைய கட்டிடங்களாகும்.
இந்த இடிபாடுகளை நீக்கும் பணி மிகவும் சிரமம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நிலையை உணர்ந்து சுமார் 2,500 ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். மாகாணம் முழுவதிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பிலும் பாதிப்பு உள்ளதால் மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதிலும் சிரமம் நிலவுகிறது.
குடிமக்கள் விவகாரங்கள் துறையினர், சம்பவ இடத்துக்கு 2,000 கூடாரங்கள், 3,000 படுக்கைகள், 3,000 கோட்டுகளை அனுப்பி வைத்துள்ளனர்.
லுடியான் நகரம் 2.66 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டது. 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இப்பகுதியில் ஏற்பட்ட 5.7 ரிக்டர் அலகு நிலநடுக்கத்தால் 80 பேர் உயிரிழந்தனர்; 800-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை திபெத்திலுள்ள ஜிகாட்ஸ் பகுதியில் 5.0 ரிக்டர் அலகு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள இப்பகுதி அருணாசலப்பிரதேசத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது.