

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வரும் 14-ம் தேதி இம்ரான்கான் கட்சி நடத்தும் போராட்டத்தில் முதல் முறையாக அவரது மகன்கள் பங்கேற்கின்றனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ராம்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வரும் 14-ம் தேதி அரசுக்கு எதிராக விடுதலை நடைப்பயணம் நடைபெற உள்ளது. நவாஸ் ஷெரீப் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி கடந்த தேர்தலில் முறைகேடுகள் செய்து ஆட்சியைப் பிடித்ததாக தெஹ்ரீக் இ இன்சாப் குற்றம் சாட்டி வருகிறது. தேர்தல் சீர்திருத்தம் மேற்கொண்டு, நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தவேண்டும் என அக்கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இம்ரான்கானின் மகன்கள் சுலைமான் (18), காசிம் (15) ஆகிய இருவரும் இப்போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக பாகிஸ்தான் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இம்ரான்கானின் மகன்கள் இருவரும், அவரது முன்னாள் மனைவி ஜெமீமா கானுடன் பிரிட்டனில் வசிக்கின்றனர். இதற்கு முன் இவர்கள் பாகிஸ்தான் வந்தபோதிலும் இம்ரான்கானுடன் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதில்லை.
இந்நிலையில் முதல்முறையாக இம்ரான்கானின் மகன்கள் ஆகஸ்ட் 14 போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் இதற்காக அதற்கு முந்தைய நாள் அவர்கள் பாகிஸ்தான் வரவிருப்பதாகவும் அந்நாளேடு கூறுகிறது.