Published : 23 Aug 2018 12:40 PM
Last Updated : 23 Aug 2018 12:40 PM

சவுதியில் பெண் சமூக ஆர்வலருக்கு மரண தண்டனை வழங்க முடிவு: வலுக்கும் எதிர்ப்பு

சவுதியின் கிழக்கு மாகாணங்களில் போராட்டக்காரர்களுக்கு உதவிய ஷியா பிரிவைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு தண்டனை வழங்கப்பட்டால் சவுதியில் தூக்கு தண்டனைக்கு உள்ளாகும் முதல் பெண் சமூக ஆர்வலராக அப்பெண் அறியப்படுவார்.

இதுகுறித்து லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும்  மனித உரிமைகள் அமைப்பு தரப்பில், "கலகக்கார்களுக்கு உதவியாக இருக்கும் ஐந்து சமூக ஆர்வலருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று சவுதியின் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோரி இருக்கிறார்.

தூக்கு தண்டனைக்கு உள்ளாக்கப்படவுள்ள சமூக ஆர்வலர்களில் ஷியா பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவரும் இருக்கிறார். அவரது பெயர் இஸ்ரா அல் கோம்கம்.  எந்தத் தண்டனை வேண்டுமானாலும் வழங்க கோரிக்கை வைக்கலாம். ஆனால், இஸ்ரா போன்ற சமூக ஆர்வலருக்கு அதுவும் வன்முறை சம்பவங்களில் தொடர்பு இல்லாதவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது என்பது கொடுமையானது" என்று தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் கடந்த ஒருவருடமாக அந்நாட்டு இளவரசர் பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருவது சர்வதேச அளவில் வரவேற்கப்பட்டது.

இருப்பினும் கடந்த வருடத்தில் பல சமூக ஆர்வலர்கள் (பெண்கள் உட்பட) அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவந்த நிலையில் தற்போது இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

யார் இந்த இஸ்ரா?

சவுதியின் கிழக்கு மாகாணத்தில் 2011 ஆம் ஆண்டில் நடந்த ஆர்ப்பாட்டங்களை ஆவணப்படுத்திய ஷியா பிரிவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இஸ்ரா. இதன் காரணமாக அவர் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

சவுதியில் பெரும்பாலான ஷியா முஸ்லிம்கள் கிழக்கு மாகாணங்களில் வசிக்கின்றனர். அங்கு ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டு முறைகள் அங்குள்ள சன்னி முஸ்லிம்களால் தடை செய்யப்படுவதாகவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஷியா முஸ்லிம்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

ஆனால், இதனை சவுதி அரசு மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இஸ்ராவுக்கு மரண தண்டனை வழங்கப்படும் முடிவை எதிர்த்துப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும்  பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x