

ஈரானில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 2 பேர் பலியாகினர். 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தரப்பில், "ஈரானில் கெர்மன்ஷா மாகாணத்தில் இராக் எல்லையை ஓட்டிய பகுதியில் அமைந்துள்ள டாசியாபாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியது. இதனால் அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்துக்கு 2 பேர் பலியானதாகவும், 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கெர்மன்ஷா பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 600 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.