

இராக்கில் வடக்கில் உள்ள சிஞ்சார் நகரை ஜிகாதி குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றின. இராக்கின் வடக்கில் உள்ள ஜுமார் நகரை குர்திஷ் படைகளிடம் இருந்து ஜிகாதி குழுக்கள் சனிக்கிழமை கைப்பற்றின. இந்நிலையில் சிஞ்சார் நகரும் அவர்கள் வசம் சென்றுள்ளது.
இந்நகரில் இருந்த குர்திஷ் படைகள் அதிக எதிர்ப்பு காட்டாமல் பின்வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்நகரை கைப்பற்றிய ஜிகாதி குழுக்கள், அரசு அலுவலகங்களில் தங்கள் கொடியை பறக்க விட்டுள் ளனர். குர்திஷ் படைகள் அருகில் உள்ள மலைப்பகுதிக்கு பின் வாங்கிச் சென்றதாகவும், அவர்கள் தங்கள் போர்த்திறன் மற்றும் படை பலத்தை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே சிஞ்சார் நகரின் வீழ்ச்சியால் இந்த நகரில் அடைக்கலம் புகுந்த சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்துள்ளது. இந்நகரில் இருந்து சுமார் 2 லட்சம் பேர் அருகில் உள்ள மலைப்பகுதிக்கு இடம்பெயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடும் வெப்பம் மற்றும் தாக்குதல் அபாயத்துக்கு மத்தியில் அவர்கள் உணவின்றி தவிக்க நேரிடும் என ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. இராக் மற்றும் குர்திஷ் அதிகாரி கள் தங்கள் வேறுபாடுகளை மறந்து இராக்கின் எல்லைகள் மற்றும் மக்களை காக்க ஒன்றுபட்டு செயல் படவேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.