மரண தண்டனை தீர்ப்பு பாரபட்சமானது; அரசியல் உள்நோக்கம் கொண்டது: ஷேக் ஹசீனா

ஷேக் ஹசீனா | கோப்புப் படம்
ஷேக் ஹசீனா | கோப்புப் படம்
Updated on
1 min read

டாக்கா: தனக்கு மரண தண்டனை விதித்து வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பு பாரபட்சமானது என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குற்றங்களுக்காக வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஷேக் ஹசீனா, “ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு மோசடி தீர்ப்பாயம் எனக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது. அவர்கள் பாரபட்சத்துடனும் அரசியல் உள்நோக்கத்துடனும் உள்ளனர்.

மரண தண்டனை விதித்திருப்பதன் மூலம், வங்கதேச மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரை நீக்கவும், அவாமி லீக் கட்சியை இல்லாது ஒழிக்கவும் இடைக்கால அரசில் இருக்கும் தீவிரவாத நபர்கள், வெட்கக்கேடான, கொலைகார நோக்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

டாக்டர் முகமது யூனுசின் குழப்பமான, வன்முறை நிறைந்த, பிற்போக்குத்தனமான நிர்வாகத்தால், லட்சக்கணக்கான வங்கதேச மக்களை முட்டாளாக்க முடியாது, அவர்களின் ஜனநாயக உரிமையை பறிக்க முடியாது. நீதியை வழங்குவதையோ, ஜூலை - ஆகஸ்ட் 2025-ல் என்ன நிகழ்ந்தது என்பது குறித்த உண்மையை வெளிப்படுத்துவதையோ இவர்கள் கூறும் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்பதை அவர்கள் அறிவார்கள். அவாமி லீக்கை அழித்தொழிப்பதும், முகமது யூனுஸ் மற்றும் அவரது அமைச்சர்களின் தோல்விகளில் இருந்து உலகின் கவனத்தை திசை திருப்புவதுமே அவர்களின் நோக்கமாக இருந்தது.

முகமது யூனுசின் தலைமையின் கீழ் பொது சேவைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்கள் நிறைந்த தெருக்களில் இருந்து போலீஸார் பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது, நீதித்துறையில் நியாயம் சீர்குலைக்கப்பட்டுள்ளது, அவாமி லீக் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்படவில்லை. இந்துக்களும் பிற சிறுபான்மையினரும் தாக்கப்படுகிறார்கள், பெண்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன. ஹிஸ்புத்-உத்-தஹ்ரிர் பிரமுகர்கள் உட்பட இஸ்லாமிய தீவிரவாதிகள், வங்கதேசத்தின் மதச்சார்பின்மை மரபை சீர்குலைக்க முயல்கிறார்கள்.

பத்திரிகையாளர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகிறார்கள், பொருளாதார வளர்ச்சி ஸ்தம்பித்துள்ளது. முகமது யூனுஸ் தேர்தல்களை தாமதப்படுத்துகிறார், நாட்டின் நீண்ட கால கட்சியான அவாமி லீக்கை தேர்தல்களில் பங்கேற்க தடை விதித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். கடந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் நிகழ்ந்த அரசியல் பிளவால் இரு தரப்பிலும் நிகழ்ந்த மரணங்களுக்கு நான் இரங்கல் தெரிவிக்கிறேன். ஆனால், நானோ பிற அரசியல் தலைவர்களோ போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவிடவில்லை.” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in