

ஆப்பிரிக்க நாடுகளுடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திடீர் நெருக்கம் காட்டியுள்ளார். 50-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆப்பிரிக்க – அமெரிக்க மாநாட்டை அவர் வாஷிங்டனில் நடத்தியுள்ளார். 3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது.
பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் அமெரிக்காவுக்கு சவால் விடும் அளவுக்கு சீனா வளர்ந்துள்ளது. எனவே பிற நாடுகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி அவற்றை தங்களின் ஆதரவு நாடுகளாக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் சிலவும் பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வருகின்றன. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்திகள் என்று கணிக்கப்பட்டுள்ள 10 நாடுகளில் 6 நாடுகள் ஆப்பிரிக்க கண்டத்தில்தான் உள்ளன. எனவே அவற்றுடன் ஒபாமா நெருக்கம் காட்டியுள்ளார். ஒபாமா ஆப்பிரிக்க வம்சாவளி அமெரிக்கர் என்பது நினைவுகூரத்தக்கது.