Published : 25 Aug 2018 08:51 AM
Last Updated : 25 Aug 2018 08:51 AM

உலக மசாலா: ’மிஸ்டர் பிளாஸ்டிக்’

அமெரிக்காவின் மிச்சிகனில் வசிக்கும் 57 வயது மோசஸ் லான்ஹமை எல்லோரும் ‘மிஸ்டர் பிளாஸ்டிக்’ என்று அழைக்கிறார்கள். இவரது கால்களை 180 டிகிரிக்குப் பின்னால் திருப்பி, நடக்க முடிகிறது! அதாவது முன்பக்க முட்டியிலிருந்து பாதம் வரை அப்படியே பின்பக்கம் திரும்பிவிடுகிறது. இவருக்கு இப்படி ஓர் அசாதாரணமான ஆற்றல் இருப்பதை, 14 வயதில்தான் கண்டுகொண்டார். ஜிம் வகுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு மேலே சென்றபோது, எதிர்பாராமல் பிடி நழுவி மிக மோசமாகக் கீழே விழுந்தார். மருத்துவப் பரிசோதனையில், விழுந்ததில் கால்கள் திரும்பிவிட்டதாகத் தெரிந்தது. குணமாகி வீட்டுக்கு வந்தார். ஒருநாள் திடீரென்று தன் கால்களைத் திருப்பிப் பார்த்தார். முட்டியிலிருந்து பாதம் வரை 180 டிகிரிக்குப் பின்னால் திரும்பிவிட்டது. மோசஸின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கால்களைத் திருப்ப முடிந்ததில் ஓர் ஆச்சரியம் என்றால், அப்படித் திருப்பும்போது சிறிதும் வலி இல்லாதது இன்னோர் ஆச்சரியமாக இருந்தது. மீண்டும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்தார். இவருக்கு விபத்தினால் இந்த ஆற்றல் வரவில்லை என்றும் ஏற்கெனவே இவருக்கு இப்படிக் கால்களைத் திருப்பக் கூடிய ஆற்றல் இருந்திருக்கிறது என்பதும் தெரிந்தது. “என்னுடைய ஆற்றலை நான் கண்டுகொண்ட பிறகு யாரும் செய்ய முடியாததை நம்மால் செய்ய முடிகிறது என்ற சந்தோஷம் ஏற்பட்டது. கூட்டமாக இருக்கும் இடங்களில் நான் கால்களைத் திருப்பிக்கொண்டு நடக்கும்போது, மக்களின் முகங்களில் ஏற்படும் உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இதை ரசிப்பதற்காகவே இப்படி நடந்து செல்வேன். இந்தத் திறமையை வைத்து இதுவரை 2 உலக சாதனைகளைப் படைத்திருக்கிறேன். அதில் ஒன்றை என்னை விட பின்பக்கமாகத் திருப்பிய கால்களுடன் வேகமாக நடப்பவரிடம் இழந்துவிட்டேன். சாதாரணமாக நடப்பதை விட, பின்பக்கம் திருப்பி நடக்கும்போது இன்னும் எளிதாக இருக்கிறது என்று சொல்வேன்” என்கிறார் மோசஸ்.

‘மிஸ்டர் பிளாஸ்டிக்’ அதிசய மனிதர்!

போர்ச்சுகல் நாட்டின் போர்ட்டோ நகரில் செர்ரால்வ்ஸ் ஃபவுண்டேஷன் அருங்காட்சியகம் இருக்கிறது. இங்கே பிரிட்டனைச் சேர்ந்த கலைஞர் அனிஷ் கபூர், ‘மாயத் தோற்றம்’ உருவங்களை வரைந்து வைத்திருக்கிறார். குழி போன்று தோற்றம் அளிக்கும். ஆனால், அது குழியாக இருக்காது. சாதாரண வட்டம் போன்று தோற்றம் தரும். ஆனால், அது குழியாக இருக்கும். ஒவ்வோர் இடத்திலும் அந்த மாயத் தோற்றத்தைப் பற்றியும் பாதுகாப்பாக இருக்கும்படியும் எழுதி வைத்திருக்கிறார்கள். அருங்காட்சியகத்தின் வழிகாட்டியும் எச்சரிக்கை செய்துகொண்டே இருப்பார். ஆனால் இத்தாலியைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணிக்கு இதில் நம்பிக்கை இல்லை. எப்படியாவது அதைப் பரிசோதித்து, உண்மையைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று நினைத்தார். அதனால் கறுப்பு வட்டம் என்று நினைத்து அதில் குதித்தார். 8 அடி ஆழத்தில் விழுந்தார். காயம்பட்டவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். உடனே அருங்காட்சியகத்தை மூடிவிட்டனர். இன்னும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்த பிறகு, மீண்டும் திறப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.  

எச்சரிக்கையை அலட்சியப்படுத்தலாமா? 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x