ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தானுக்கு சீக்கியர்கள் புனிதப்பயணம்

அமிர்தசரஸ் நகரில் இருந்து பாகிஸ்தானை நோக்கிச் செல்லும் இந்திய சீக்கியர்கள்
அமிர்தசரஸ் நகரில் இருந்து பாகிஸ்தானை நோக்கிச் செல்லும் இந்திய சீக்கியர்கள்
Updated on
1 min read

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்தும் மலர்களைத் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தணிந்துள்ள நிலையில், முதல்முறையாக இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தான் சென்றுள்ளனர். சீக்கிய மத குருவான குரு நானக்கின் பிறந்த இடமான நான்கானா சாஹிப் நகரும், அவர் உயிரிழந்த கர்தார்பூர் நகரும் பாகிஸ்தானுக்குள் உள்ளன. அதோடு, சீக்கியர்களுக்கு நெருக்கமான பல்வேறு வழிபாட்டுத் தலங்களும் பாகிஸ்தானில் உள்ளன. இவற்றுக்கு சீக்கியர்கள் சுற்றுலா செல்வது வழக்கம்.

குருநானக் தொடர்பான 10 நாள் விழா நான்கானா சாஹிப் நகரில் நடைபெற உள்ளதை முன்னிட்டு 2,100-க்கும் மேற்பட்ட சீக்கிய பக்தர்களுக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் விசா வழங்கி உள்ளது. இதையடுத்து இன்று காலை ஏராளமான பக்தர்கள் வாகா - அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்குச் சென்றனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும் பூக்களைத் தூவியும் பாகிஸ்தான் அதிகாரிகள் வரவேற்றனர். நான்கானா சாஹிப் நகரில் குருநானக்கிற்கு கட்டப்பட்டுள்ள சீக்கிய மத வழிபாட்டுத் தளத்தில் இவர்கள் கூட உள்ளனர். அங்கு வழிபாடு மேற்கொள்ளும் இந்திய சீக்கியர்கள், பின்னர் கர்தார்பூருக்கும் பிற இடங்களுக்கும் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையேயான நல்லணிக்கம் மற்றும் புரிதலை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் இந்திய யாத்ரீகர்களுக்கு விசாக்களை வழங்கி உள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in