Last Updated : 25 Aug, 2018 08:53 AM

 

Published : 25 Aug 2018 08:53 AM
Last Updated : 25 Aug 2018 08:53 AM

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மதுவால் 28 லட்சம் பேர் பலி: வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வில் தகவல்

மது குடிப்பதால் வரும் நோய்கள், பிரச்சினைகள், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து அமெரிக்காவின் சியாட்டில் நகரிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை நடத்தியுள்ளனர். அந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 28 லட்சம் பேர் மது குடிப்பதால் இறப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறைந்த அளவு மது குடிப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதற்கு எந்தவித சாதகமான முடிவும் இந்த ஆய்வில் கிடைக்கவில்லை.

எப்போதாவது மது குடிப்பதாலும் உடலின் ஆரோக்கியம் கெடும் என்பதற்கு சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளன. மது குடிப்பதை நிறுத்துவதன்மூலம் மட்டுமே ஒருவரின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை அமெரிக்க அரசுக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மது குடித்ததால் மட்டும் 2016-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 28 லட்சம் பேர் இறந்துள்ளனர். 15 முதல் 49 வயதுள்ளவர்கள் மது குடிப்பதால் அவரது வாழ்க்கை முடிவதற்கோ அல்லது உடல் உறுப்புகளை இழப்பதற்கோ அதிக வாய்ப்பு உள்ளது. இந்த வயதில் உள்ளவர்கள் குடிப்பதால் சுமார் 20 சதவீத உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாஷிங்டன் பல்கலைக்கழகத்திலுள்ள இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் எவால்யூஷன் பேராசிரியர் மேக் கிரிஸ்வோல்ட் கூறியதாவது: ஒரு நாளைக்கு குறைந்த அளவு மது எடுத்துக் கொள்பவர்கள் நாளடைவில் அதிக அளவில் மது குடிப்பவர்களாக மாறி விடுகின்றனர். அதுவே அவர்களின் உயிரிழப்புக்கும் காரணமாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மது குடிப்பதால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதற்கு சிறியளவில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆனால் மது ஏற்படுத்தும் மற்ற பாதிப்புகள் அதிகமாக உள்ளன.

பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை அளித்துள்ள நிதியின் மூலம் இந்த ஆய்வை பல்கலைக்கழக குழு மேற்கொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x