

துருக்கியில் முதன்முதலாக பொதுமக்கள் வாக்கெடுப்பின் மூலம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தற்போதைய பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன் வெற்றி வெற்றுள்ளார். இதனை துருக்கி தலைமைத் தேர்தல் ஆணையர் சதி குவென் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள் ளார். “பெரும்பான்மை வாக்குகள் பெற்று எர்டோகன் வெற்றி பெற்றுள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.
துருக்கி அதிபர், இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். 91 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் உயரிய தலைவரான அதிபரை, பொதுமக்களே தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மும்முனைப் போட்டி
இதில், மொத்தம் 5.3 கோடி வாக்காளர்களுக்காக, 1.6 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதிபர் தேர்தலில் தற்போதைய பிரதமர் தயிப் எர்டோகன், இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பின் முன்னாள் தலைவர் எக்மெலிட்டின் இசானொக்லு, குர்திஷ் இன மக்கள் தலைவர் செலாஹதின் டெமிர்டாஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.
எர்டோகன் வெற்றி
பதிவான வாக்குகளில் 95 சதவீதம் எண்ணப்பட்ட நிலையில், எர்டோகன் 52 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார். இதையடுத்து எர்டோகனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. எர்டோகனின் முக்கியப் போட்டியாளரான எக்மெலாத்தின் இசானொக்லு 40 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக இசானொக்லு கூறும்போது, “தேர்தல் முடிவுகள், துருக்கியின் ஜனநாயகத்துக்குப் பலனளிக்கும் என நம்புகிறேன். பிரதமர் எர்டோகனின் வெற்றிக்கு வாழ்த்துகள்” என்றார். துருக்கி அதிபரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். எர்டோகன் மூன்றாவது முறையாக பிரதம ராகப் பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“மக்கள் தங்களின் விருப்பத்தை வாக்குப்பதிவில் காட்டியுள்ளனர்” என எர்டோகன் இஸ்தான்புல்லில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.