Published : 02 Aug 2018 10:43 AM
Last Updated : 02 Aug 2018 10:43 AM

கவாஸ்கர், கபில்தேவ், சித்து, அமீர்கானுக்கு இம்ரான் கான் அழைப்பு

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள இம்ரான் கான், தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத் சிங் சித்து உள்ளிட்டோருக்கும், இந்தி திரை நட்சத்திரமான அமீர் கானுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை.

இந்த நிலையில் மற்ற கட்சிகளுடன் உதவியுடன் ஆட்சியமைக்க இம்ரான் கான் முடிவு செய்துள்ளார். ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் அழைக்க இம்ரான் கான் முடிவு செய்துள்ளார்.

சார்க் நாடுகளின் தலைவர்களையும், பிரதமர் மோடியையும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்க அவர் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்துடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இதுமட்டுமல்லாமல், இம்ரான் கான் கிரிக்கெட் வீரர் என்பதால் கிரிக்கெட் பிரபலங்களையும், சினிமா பிரபலங்களையும் தனது பதவியேற்பு விழாவுக்கு அழைக்க அவர் முடிவு செய்துள்ளார். அதன்படி இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே இந்தி திரைப்பட நடிகரான அமீர்கானுக்கும் பிடிஐ கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் விடுத்த அழைப்பை, சித்து ஏற்றுக் கொண்டுள்ளார். இம்ரான் கான் மிகச்சிறந்த குணநலன்கள் கொண்டவர் என சித்து புகழ்ந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x