ஜப்பானின் முதல் பெண் பிரதமராகிறார் சனே தகைச்சி

ஜப்பானின் முதல் பெண் பிரதமராகிறார் சனே தகைச்சி
Updated on
1 min read

டோக்கியோ: ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக தேர்வாகியுள்ள சனே தகைச்சி, இம்மாத மத்தியில் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

ஜப்பானின் ஆளும் கட்சியாக லிபரல் டெமாக்ரடிக் கட்சி உள்ளது. இக்கட்சியின் தலைவராகவும் ஜப்பானின் பிரதமராகவும் இருந்த ஷிகெரு இஷிபா, ஓராண்டு பதவிக்காலத்துக்குப் பிறகு பதவி விலகப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இதையடுத்து, லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் சனே தகைச்சி வெற்றி பெற்றதாக இன்று அறிவிக்கப்பட்டது.

முதல் கட்ட வாக்குப்பதிவில், மொத்தமுள்ள 589 வாக்குகளில் 183 வாக்குகளை சனே தகைச்சி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொய்சுமி 164 வாக்குகளைப் பெற்றார். மற்ற மூன்று போட்டியாளர்கள், போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இரண்டாவது சுற்றில் கட்சி எம்பிக்கள் வாக்களித்தனர். இதில், சனே தகைச்சியைவிட கொய்சுமி அதிக வாக்குகளைப் பெற்றார். எனினும், இரண்டாவது சுற்றுக்குப் பிறகு நடத்தப்பட்ட தீர்க்கமான சுற்று வாக்கெடுப்பில் சனே தகைச்சி வெற்றி பெற்றார். இதையடுத்து, லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக சனே தகைச்சி முறைப்படி பொறுப்பேற்றார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர் நாட்டின் பிரதமராக இம்மாத மத்தியில் பதவியேற்க உள்ளார். 64 வயதாகும் வலதுசாரி தலைவரான சனே தகைச்சி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி இருக்கும். லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைமையிலான கூட்டணி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருக்கவில்லை. எனினும், நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெறுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 70 ஆண்டுகளாக ஜப்பானின் ஆளும் கட்சியாக லிபரல் டெமாக்ரடிக் கட்சியே பெரும்பாலும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in