கரோனா பரவல் குறித்து முதலில் தகவல் தெரிவித்த சீன பெண் பத்திரிகையாளருக்கு தண்டனை நீட்டிப்பு

கரோனா பரவல் குறித்து முதலில் தகவல் தெரிவித்த சீன பெண் பத்திரிகையாளருக்கு தண்டனை நீட்டிப்பு
Updated on
1 min read

பீஜிங்: சீனாவில் கரோனா தொற்று பரவியுள்ளதை பற்றி முதலில் தெரிவித்த பெண் பத்திரிகையாளருக்கு மேலும் 4 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்துதான் கரோனா தொற்று பரவத் தொடங்கியதாக கூறப்படும் நிலையில், 42 வயதான ஜாங் ஜான் என்ற சீன பெண் பத்திரிக்கையாளார் கரோனா ஆரம்பகால பரவல் குறித்து சீனாவின் வூஹான் நகரில் இருந்து நேரடி அறிக்கைகளை வெளியிட்டார்.

நெரிசலான மருத்துவமனைகள், வெறிச்சோடிய தெருக்கள் அடங்கிய காணொளிகள் உள்ளிட்ட பதிவுகளை வெளியிட்டார்.

இதையடுத்து, ஜாங் ஜான் மீது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தார், மக்களிடையே விவாதத்தைத் தூண்டினார் என்று சீன அரசால் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜாங் ஜான் கைது செய்யப்பட்டார். டிசம்பர் 2020 -ல் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு சிறையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில், 2024 மே மாதம் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டபோது, ஜாங் என்ன நடவடிக்கைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டார் என்பதை சீன அதிகாரிகள் சரியாக குறிப்பிடவில்லை.

இந்நிலையில் அவருக்கான சிறைத் தண்டனை தற்போது மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஜாங் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

உலகிலேயே சீனாவில் தான் பத்திரிகையாளர்களுக்கான உலகின் மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. இதில், குறைந்தது 124 ஊடக ஊழியர்கள் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in