பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐ.நா தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐ.நா தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: பாலஸ்தீனப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த 'நியூயார்க் பிரகடனத்தை' ஆதரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வாக்களித்தது.

பிரான்ஸ் அறிமுகப்படுத்திய இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 142 நாடுகள் வாக்களித்தன, எதிராக 10 நாடுகள் வாக்களித்தன, 12 நாடுகள் வாக்களிக்கவில்லை. இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தவர்களில் அர்ஜென்டினா, ஹங்கேரி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும்.

பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த நியூயார்க் பிரகடன தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 142 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

ஜூலை மாதம் ஐ.நா. தலைமையகத்தில் பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா இணைந்து நடத்திய உயர்மட்ட சர்வதேச மாநாட்டில் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

இந்த பிரகடனத்தில், ‘காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், இரு நாடுகளையும் தனித்தனி நாடுகளாக அங்கீரிப்பதன் அடிப்படையில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு ஒரு நியாயமான, அமைதியான மற்றும் நீடித்த தீர்வை அடைவதற்கும், பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலியர்கள் மற்றும் பிராந்தியத்தின் அனைத்து மக்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என வலியுறுத்தப்பட்டது.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், கிழக்கு ஜெருசலேம் உட்பட பல பகுதிகளில் நடக்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும் இஸ்ரேலை அந்த பிரகடனம் கேட்டுக்கொண்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in