‘ஊழலை ஒழியுங்கள்’ - இடைக்கால பிரதமர் சுசீலா கார்கிக்கு நேபாள மக்கள் கோரிக்கை

நேபாள நாட்டின் இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி
நேபாள நாட்டின் இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி
Updated on
1 min read

காத்மாண்டு: நேபாள நாட்டில் ஏற்பட்ட இளைஞர்களின் புரட்சி போராட்டம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக அசாதாரண சூழல் நிலவும் வேளையில் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்றுள்ளார். இந்த சூழலில் ஊழலை ஒழிக்க வேண்டுமென அவரிடம் நேபாள மக்கள் கோரியுள்ளனர்.

நேபாள நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா கார்கி, பிரதமராக பொறுப்பேற்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட ‘ஜென் ஸீ’ தலைமுறையினர் ஓரணியில் நின்று ஆதரவு தெரிவித்தனர். அதன்படி வெள்ளிக்கிழமை அன்று நேபாள நாட்டின் முதல் பெண் பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்றார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுமார் மூன்று நாட்கள் நேபாளத்தில் போராட்டம் நீடித்தது. இதில் 51 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். தற்போது அங்கு அமைதி நிலை மெல்ல திரும்பி வருகிறது. இந்த சூழலில் தங்கள் நாட்டின் ஆட்சி பொறுப்புக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் சுசீலா கார்கி ஆட்சியில் ஊழலை ஒழிக்க வேண்டுமென்பது மக்களின் விருப்பம், எதிர்பார்ப்பாக உள்ளது. அங்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

“நேபாளத்தில் புதிய சகாப்தத்தின் விடியலை பிரதமர் சுசீலா கார்கி தொடங்குவார் என்று நான் எதிர்பார்க்கிறேன். தேசத்தை பாதுகாத்து, வளர்ச்சி பாதைக்கு அவரது தலைமையிலான ஆட்சி அழைத்து செல்லும் என நம்புகிறேன்” என காத்மாண்டு நகரை சேர்ந்த சுமன் கூறியுள்ளார்.

“நாட்டில் சிறந்த ஆட்சி நிர்வாகம் வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. அதற்கு ஏற்றபடி துறைசார்ந்த வல்லுநர்களை கேபினட் பொறுப்பில் நியமிக்கலாம். அது வழக்கறிஞர், ஆசிரியர், நீதிபதி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அது தேசத்தின் வளர்ச்சிக்கு வலு சேர்க்கும். ஊழலுக்கு விடை கொடுக்க வேண்டும்” என நேபாளத்தை சேர்ந்த ராம் குமார் சிம்கதா கூறியுள்ளார்.

“பிரதமர் சுசீலா கார்கி ஆட்சியில் நாங்கள் எதிர்பார்ப்பது ஒன்றுதான். அது அரசியலமைப்பில் திருத்தம் செய்து ஊழலை ஒழிக்க வேண்டும் என்பது மட்டுமே. இதன் மூலம் ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என லீலா என்பவர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி​ (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்பட்டது. இந்த சூழலில் இளைஞர்கள் மற்றும் மக்களின் ஆதரவுடன் சுசீலா கார்கி, இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in