

ஆப்கானிஸ்தானில் விமான நிலையம் நுழைவாயிலில் அந் நாட்டு துணை அதிபரை குறிவைத்து நடந்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 14 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து பிடிஐ வெளியிட்ட செய்தியில், "ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள விமான நிலையத்தின் நுழைவு பகுதியில், அந்நாட்டின் துணை அதிபர் அப்துல் ராஷித்தை வரவேற்பதற்காக தொண்டர்கள் கூடி இருந்தனர். அப்போது அங்கு நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 14 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானவர்களில் 9 பேர் ஆப்கான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
ஆப்கன் துணை அதிபர் அப்துல் ராஷித் மீது மனித உரிமை மீறம் மற்றும் போர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவர் சில ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் நாடு திரும்பிய அவரை வரவேற்பதற்காக அவரது கட்சித் தொண்டர்கள் கூடியிருந்த வரவேற்பு நிகழ்வில் இந்தத் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தலிபான்கள் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று ஆப்கான் போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்