இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: ஜி ஜின்பிங் உடனான சந்திப்பில் பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: ஜி ஜின்பிங் உடனான சந்திப்பில் பிரதமர் மோடி அறிவிப்பு
Updated on
1 min read

சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற 15-வது இந்திய, ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதன் பிறகு அவர் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று டோக்கியோவில் 16 ஜப்பானிய ஆளுநர்களுடன் கலந்துரையாடினார்.

ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க செண்டாய் நகரில் இருந்து சீனாவின் தியான்ஜின் நகருக்கு விமானத்தில் சென்றார். ஏழு ஆண்டுகளுக்கு பின் சீனா சென்ற அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

எஸ்சிஓ அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை முன்னெடுத்து செல்ல உறுதி பூண்டிருப்பதாக பிரதமர் மோடி சீன அதிபரிடம் தெரிவித்தார்.

“கடந்த ஆண்டு, கசானில் மிகவும் அர்த்தமுள்ள விவாதங்களை நடத்தினோம், இதன் மூலம் நமது உறவுகள் நேர்மறையான திசையில் சென்று கொண்டிருக்கின்றன. எல்லையில் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட சூழல் உருவாக்கப்பட்டது.

எல்லை மேலாண்மை விஷயத்தில் நமது சிறப்பு பிரதிநிதிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்தும் தொடங்கப்படுகிறது. நமது நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புடன், 2.8 பில்லியன் மக்களின் நலன்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது மனிதகுலத்திற்குத் தேவை.” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in