ஏமனில் இஸ்ரேல் தாக்குதல்: ஹவுதி அரசின் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டார்

ஏமனில் இஸ்ரேல் தாக்குதல்: ஹவுதி அரசின் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டார்
Updated on
1 min read

சனா: ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி அரசின் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சிப் படை சனிக்கிழமை அன்று அறிவித்தது. இந்த தாக்குதல் ஏமன் தலைநகர் சனாவில் நடந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹவுதி அரசின் அமைச்சர்கள் மற்றும் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது. இதை அன்றைய தினம் இஸ்ரேல் பாதுகாப்பு படையும் உறுதி செய்திருந்தது. ‘ஹவுதி தீவிரவாத படையின் முக்கிய இடத்தின் மீது துல்லிய தாக்குதல் மேற்கொண்டோம்’ என இஸ்ரேல் தெரிவித்தது.

கடந்த 2024-ல் ஆகஸ்ட் மாதம் ஹவுதி அரசின் பிரதமர் பொறுப்பை அஹமத் அல்-ராஹாவி ஏற்றார். இந்நிலையில், அண்மையில் அவரது தலைமையில் தங்களது அரசின் ஓராண்டு கால செயல்பாடு குறித்த ஆலோசனை நடந்துள்ளது. அதில் ஹவுதி அரசின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அப்போது இந்த தாக்குதல் நடந்ததாக ஹவுதி படை கூறியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மோதலில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் மீது ஹவுதி படையின் தொடுத்திருந்தனர். இருப்பினும் அந்த ஏவுகணைகளை வான் பாதுகாப்பு கவச அமைப்பு மூலம் இடைமறித்து அழைத்திருந்தது இஸ்ரேல். அதோடு செங்கடல் பகுதியில் கப்பல்களையும் குறிவைத்து தாக்கி இருந்தது ஹவுதி. அதற்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் செயல்பட்டன.

இந்த சூழலில் கடந்த மே மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகம், ஹவுதி படையினருடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அதில் செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்தினால், தங்களது வான்வழி தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக அமெரிக்க தெரிவித்தது. இருந்தாலும் இந்த ஒப்பந்தம் இஸ்ரேல் உடன் தொடர்பு கொண்ட கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்தாது என ஹவுதி தெரிவித்தது.

முன்னதாக, இந்த வாரம் ஏமன் தலைநகர் சனாவில் தொடர் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது. அதில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 102 பேர் காயமடைந்ததாக ஹவுதி அரசு தெரிவித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in