எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
Updated on
1 min read

தியான்ஜின்(சீனா): எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் உச்சிமாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தியான்ஜின் நகரில் உள்ள பின்ஹாய் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன உயர் அதிகாரிகளும் இந்திய உயர் அதிகாரிகளும் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். விமான நிலையத்தில் கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

எஸ்சிஓ அமைப்பில் பெலாரஸ், சீனா, ஈரான், இந்தியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. மேலும் பல நாடுகள் பார்வையாளர்களாகவும், பேச்சுவார்த்தை நடத்தும் நாடுகளாகவும் இதில் பங்கேற்கின்றன. 2005 முதல் பார்வையாளராக இருந்த இந்தியா, 2017ல் உறுப்பு நாடாக மாறியது.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த 2020-ல் நிகழ்ந்த மோதலுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றது இதுவே முதல்முறை. இந்த மோதலுக்குப் பிறகு இரு நாடுகளும் உறவை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கடந்த 18-19 தேதிகளில் இந்தியா வந்து, பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையே நேரடி விமானப் போக்குவரத்தை கூடிய விரைவில் தொடங்கவும் இரு நாடுகளும் முடிவெடுத்துள்ளன.

எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தனது சீன பயணம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சீனாவின் தியான்ஜினில் தரையிறங்கி உள்ளேன். SCO உச்சிமாநாட்டின் கலந்துரையாடல்களையும் பல்வேறு உலகத் தலைவர்களுடனான சந்திப்பையும் எதிர்நோக்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சீனா உடனான வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் வரிவிதிப்பு கொள்கைகளால் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in