

நான் அவன் பெயரைக் கேட்டேன்.. மொங்கோல் அவனது பெயர்.. அதுவே நான் மகிழ்ச்சி அடைவதற்குப் போதுமானதாக இருந்தது என்று தாய்லாந்தில் குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவனின் தாய் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கி.மீ. நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்கு சாகசப் பயணம் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளர் ஒருவரும் சென்றார்.
ஆனால், இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ள நீர் குகைக்குள் புகுந்தது. நீரும், சேறுமாகக் குகை சூழ்ந்ததால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி அவர்கள் குகைக்குள் சிக்கினர்.
தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அங்கு தற்போது பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் உதவிக்கரம் நீட்ட, மீட்புப் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெறுகிறது.
தாய்லாந்து மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்த நீச்சல் வீரர்கள் நேற்று முன்தினம் களத்தில் இறங்கி 4 சிறுவர்களைப் பத்திரமாக மீட்டுவந்தனர். நேற்று மீட்புக் குழுவினர் மேலும் 4 சிறுவர்களை அதிரடியாக மீட்டனர்
இந்த நிலையில் சுமார் ஒருவாரமாக அந்தக் குகையில் தனது மகனின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்த தாயார் ஒருவர் கார்டியனின் செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, ”நான் அவன் பெயரைக் கேட்டேன்...மொங்கோல் அவனது பெயர்....அதுவே நான் மகிழ்ச்சி அடைவதற்குப் போதுமானதாக இருந்தது. அவனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்கள். அதனைத் தொடர்ந்தே அவனை நான் பார்க்க முடிந்தது.
அவன் சிறுவயதிலிருந்து கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் ஆகியவை பிடிக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவன் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவான்’’ என்று தெரிவித்தார்.
குகையில் சிக்கியுள்ள மீதமுள்ள 4 சிறுவர்களையும், பயிற்சியாளரையும் மீட்க மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.