Published : 08 Jul 2018 02:15 PM
Last Updated : 08 Jul 2018 02:15 PM

‘‘இனிமேலும் காத்திருக்க முடியாது’’ தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க அதிரடி நடவடிக்கை

தாய்லாந்த்தில் குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களை உயிருடன் மீட்பதற்காக பல்வேறு வாய்ப்புகள் ஆலோசிக்கப்பட்ட நிலையில், அந்த சிறுவர்கள் மிகவும் களைத்து விட்டதால் இனிமேலும் தாமதிக்காமல் அதிரடியாக நீரில் சென்று அவர்களை மீட்டு வரும் பணி தொடங்கியுள்ளது.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கி.மீ. நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகையை சுற்றி பார்க்கச் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளரும் சென்றார்.

ஆனால், இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ளம் நீர் குகைக்குள் புகுந்தது. நீரும், சேறுமாக குகை சூழந்துள்ளதால் அவர்களால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்று அவர்கள் குகைக்குள் சிக்கியுள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அங்கு தற்போது பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் உதவிக்கரம் நீட்ட, தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டபோதிலும், மோசமான வானிலையால் அவர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. குகைக்குள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதால் உள்ளே சிக்கியுள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அவர்களுக்கு ஆக்ஸிஜன் பெட்டிகளை வழங்கி காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்ஸிஜன் பெட்டியை எடுத்துச் சென்ற தாய்லாந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார். அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடந்து வரும் நிலையில், சிறுவர்கள் இருக்கும் பகுதியில் குகையின் மேல் பகுதியில் துளையிட்டு அதன் வழியாக அவர்களை தூக்குவது பற்றியும் ஆலோசனை நடந்தது.

அதுபோலவே நீச்சலில் திறன் படைத்த கடற்படை வீரர்களை அனுப்பி சிறுவர்களை முதுகில் சுமந்து கொண்டு வரலாமா எனவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் மழை பெய்து வருவதால் அங்கு மீட்பு பணிகளை செய்யவதில் சிக்கல் ஏற்பட்டது. எந்த ஒரு நடவடிக்கை எடுத்தாலும், அந்த சிறுவர்களை உயிருடன் மீட்பது முக்கியம் என்பதால் அதிக கவனத்துடன் திட்டமிடப்பட்டு வந்தது.

இந்நிலையில் குகையில் சிறுவர்கள் சிக்கி 15 நாட்களுக்கு மேல் ஆகி விட்டதால் இனிமேலும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். அதிரடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி தாய்லாந்து மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள நீச்சல் வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். சகதி கலந்த வெள்ள நீரில் நீந்தி சென்று, சிறுவர்களை மீட்கும் நடவடிக்கையை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x