Published : 18 Jul 2018 08:55 PM
Last Updated : 18 Jul 2018 08:55 PM

32 கி.மீ. நடந்து வேலைக்கு வந்த ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி: காரை பரிசாக அளித்து நெகிழச் செய்த முதலாளி

வேலையின் முதல் நாளில் நேரத்துக்குச் செல்ல வேண்டும் என்ற கடமை உணர்ச்சியால், 32 கி.மீ. நடந்துசென்று பணியில் சேர்ந்த ஊழியரைப் பார்த்த முதலாளி அவருக்கு காரைப் பரிசாக அளித்து நெகிழச் செய்தார்.

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிரிமிங்ஹாமில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

பிரிமிங்ஹாம் நகர் அருகே பெல்ஹாம் நகரைச் சேர்ந்தவர் வால்டர் கார் (22. கல்லூரியில் படித்து வரும் இவருக்கு பிரிமிங்ஹாமில் உள்ள பெல்ஹாப்ஸ் எனும் நிறுவனத்தில் பகுதிநேர வேலை கிடைத்தது. இந்த நிறுவனத்துக்குச் செல்ல  32 கி.மீ. தொலைவை வால்டர் கடக்க வேண்டும்.

சமீபத்தில் அமெரிக்காவை உலுக்கிய காத்தரீனா புயலில் வால்டர் காரின் வீடு தரைமட்டமானதால், புதிய வீட்டில் தனது தாயுடன் வறுமையான சூழலில் வாழ்ந்து படித்து வருகிறார்.

இந்நிலையில் வேலை கிடைத்து முதல்நாள் பணிக்குச் செல்ல வேண்டும். ஆனால், கையில் பணம் இல்லாத காரணத்தால், பெல்ஹாம் நகரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள பிரிமிங்ஹாம் நகருக்கு இரவு நடந்து செல்ல வால்டர் கார் திட்டமிட்டு நடக்கத் தொடங்கினார்.

அப்போது, அதிகாலை 4 மணி அளவில் சாலையில் ரோந்துப்பணியில் இருந்த போலீஸ் அதிகாரி மார்க் நைட்டன் உள்ளிட்ட சிலர் அந்த இளைஞரை மடக்கி எங்கு செல்கிறாய் எனக் கேட்டுள்ளனர். அப்போது வால்டர் கார் தன்னுடைய குடும்ப சூழலைக் கூறி வேலைக்கு முதன்முதலாகச் செல்கிறேன், கையில் பணம் இல்லாததால் நடந்து செல்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட இரக்கப்பட்ட போலீஸார், வால்டர் காருக்கு உணவு வாங்கிக்கொடுத்து விடிந்த பின் செல்லலாம் எனக் கூறி ஒரு தேவாலயத்தில் தங்கவைத்துள்ளனர்.

அதன்பின் காலையில் அந்த போலீஸ் அதிகாரிகள் வால்டர் காரை அழைத்துக் கொண்டு தங்களின் தோழி லேமே என்பவர் வீட்டுக்குச் சென்றனர். லேமே என்பவர் நாள்தோறும் பிரிமிங்ஹாம் நகருக்கு வேலைக்கு காரில் செல்பவர். அவரிடம் வால்டர் காரின் கதையைக் கூறி, பிர்மிங்ஹாம் நகரில் உள்ள அவரின் நிறுவனத்தில் கொண்டுபோய் இறக்கிவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

வால்டர் காரின் கதையைக் கேட்டு நெகிழ்ந்த லேமே, தனது காரில் வால்டரை அழைத்துக் கொண்டு நிறுவனத்தில் இறக்கிவிட்டார். மேலும், அந்த நிறுவனத்தின் முதலாளியும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க்லினிடம் இந்தக் கதையைக் கூறி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தனது ஊழியரின் அர்ப்பணிப்பு உணர்வைப் பார்த்து வியந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க்லின் தான் பயன்படுத்திய காரை வால்டருக்குப் பரிசாக அளித்து அவரை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளார். இந்தச் சம்பவங்கள் அனைத்தையும், லேமே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பகிர்ந்து வருவதுடன் வால்டரைப் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x