

கிரீஸ் நாட்டின் இரண்டு இடங்களில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ விபத்தில் 24 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ”கிரீஸின் தலைநகர் ஏதென்ஸில் இரண்டு இடங்களில் திங்கட்கிழமை கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த காட்டுத் தீ செவ்வாய்க்கிழமை அதிகாலையிலும் நீடித்தது. இந்தக் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. காட்டுத் தீ ஏற்பட்ட இடங்களில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காட்டுத் தீ விபத்து குறித்து கிரீஸ் துணை அமைச்சர் ஒருவர் கூறும்போது, "கிட்டத்தட்ட 700 பேரை கடற்கரைப் பகுதிகளிருந்து வெளியேற்றியுள்ளோம். சுமார் 600 தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது" என்றார்.
கிரீஸில் சமீபத்தில் ஏற்பட்ட மோசமான காட்டுத் தீ விபத்தாக இது கருதப்படுகிறது.