Published : 24 Jul 2018 08:38 AM
Last Updated : 24 Jul 2018 08:38 AM

உலக மசாலா: கோவேறு கழுதைக்கு அங்கீகாரம்!

இங்கிலாந்தில் வளர்ப்பு குதிரைகளுக்குப் பயிற்சியளித்து அவற்றுக்கு இடையே போட்டிகளும் அடிக்கடி நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டிகளில் ஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்த கோவேறு கழுதை இனத்தை மட்டும் சேர்த்துக்கொள்வதில்லை. கிறிஸ்டி மெக்லியன், கோவேறு கழுதைகளுக்கும் குதிரைகளைப்போல் உரிமை கிடைக்க வேண்டும் என்று போராடினார். இறுதியில் அவருக்கு வெற்றி கிடைத்தது. தான் வளர்த்து வரும் கோவேறு கழுதைக்கு முதல்முறை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார். "அயர்லாந்தில் ஆதரவற்ற நிலையில் இந்தக் கோவேறு கழுதையைக் கண்டுபிடித்தேன். தத்தெடுத்து வளர்த்தேன். பயிற்சியும் அளித்தேன். சிறிய குதிரைகளுடன் என்னுடைய 11 வயது கோவேறு கழுதை போட்டியில் பங்கேற்றது. முதல் நாள் இரவு முழுவதும் தூக்கமே இல்லை. இந்தப் போட்டியில் பங்கேற்றதில், வரலாற்றில் இடம்பிடித்து விட்டது" என்கிறார் கிறிஸ்டி மெக்லியன்.

அங்கீகாரம் வாங்கிக் கொடுத்த கிறிஸ்டிக்கு வாழ்த்துகள்!

இங்கிலாந்தைச் சேர்ந்த 62 வயது பேட்ரிக் ரியான், 14 வயதிலிருந்து சிறைக்குச் சென்று வருகிறார். தன் வாழ்க்கையில் மொத்தம் 23 ஆண்டுகள் சிறைக்குள் இருந்திருக்கார். சமீபத்தில் 18 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்று, சிறைக்குச் சென்றிருக்கிறார். இது அவருடைய 668-வது குற்றமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் மிக அதிக தடவை குற்றம் சாட்டப்பட்டவர் என்ற பெயர் இவருக்குக் கிடைத்திருக்கிறது. 668 குற்றங்களில் 469 குற்றங்களுக்குத் தண்டனையை அனுபவித்திருக்கிறார். ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் நீதிமன்ற வழக்குகளுக்காகச் செலவு செய்கிறார். ஆனாலும் இவர் தன்னுடைய செயல்களை மாற்றிக்கொள்வதாக இல்லை. கடந்த ஏப்ரல் 24 அன்று, குடித்துவிட்டுப் பேருந்தில் ஏறினார். பேருந்திலேயே சிறுநீர் கழித்தார். சக பயணிகள் பேருந்து ஓட்டுநரிடம் முறையிட்டனர். உடனடியாக அவர் பேருந்தை விட்டு கீழே இறக்கிவிடப்பட்டார். அடுத்த பேருந்தில் ஏறி, மீண்டும் சிறுநீர் கழித்தார். இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் காவல் துறையில் புகார் கொடுத்துவிட்டனர். இரண்டு குற்றங்களுக்காக இப்போது 18 மாதங்கள் சிறையில் இருக்கிறார். "மிகப் பெரிய குற்றம் செய்யாததால் மாதக் கணக்கில் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்துவிடுவார். ஏமாற்றுவது, பொய் சொல்வது, செய்யக் கூடாது என்று அறிவிப்பு இருக்கும் இடங்களில் மீறி செய்வது, பெண்களிடம் வம்பு செய்வது, பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்வது என்று இவர் செய்யும் செயல்களுக்குக் கணக்கே இல்லை. சிறைக்குள் குடிக்க முடியாது என்பதால் ஒழுங்காக இருப்பார். வெளியே வந்தவுடன் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு, தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் ஏதாவது செய்து மாட்டிக்கொள்வார். இங்கிலாந்து வரலாற்றிலேயே அதிக முறை சிறை சென்றவர் இவர்தான். செய்தித்தாள்களில் அடிக்கடி இடம்பெறும் பெயரும் இவருடையதுதான்” என்கிறார் பிரஸ்டன் க்ரவுன் நீதிமன்ற வழக்கறிஞர்.

இதெல்லாம் ஒரு சாதனையா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x