பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பெய்ஜிங்: ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகளின் தூதரகங்கள் பரஸ்பர நலன் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க ஆர்ஐசி என்ற முறையை அமைத்திருந்தன. கரோனா பரவல் காரணமாகவும், கிழக்கு லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவும் ஆர்ஐசி முறையின் செயல்பாடு தடைபட்டது.

தற்போது இந்தியா - சீனா இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து வருகின்றன. சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன பயணம் மேற்கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங், வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோ ஆகியோரை அவர் சந்தித்து பேசினார். இதில் ஆர்ஐசி முறையை மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், “சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய 3 நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு பரஸ்பர நலன் மட்டும் இன்றி, உலக அமைதி, முன்னேற்றத்துக்கும் உதவும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in