பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

‘இந்தியாவுக்கு எதிராக அணு அயுதங்களை பயன்படுத்த நினைக்கவில்லை’ - பாக். பிரதமர்

Published on

இஸ்லாமாபாத்: இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது. தொடர்ந்து பாகிஸ்தான் தரப்பில் இருந்து எல்லையோர இந்திய மாநிலங்கள் குறிவைக்கப்பட்டன. அந்த தாக்குதலை இந்திய ராணுவம் இடைமறித்து அழித்தது. பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், இந்த மோதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சனிக்கிழமை அன்று மாணவர்களுடன் இஸ்லாமாபாத் நகரில் உரையாடினார். அப்போது, இந்தியா உடனான நான்கு நாள் நீடித்த அண்மைய மோதலை அவர் நினைவுகூர்ந்தார்.

“நமது அணுசக்தி திட்டம் முற்றிலும் தேசத்தின் தற்காப்பு ரீதியான நடவடிக்கையை சார்ந்தது. அதன் நோக்கம் அமைதியை நோக்கியது. தாக்குதல் நடத்த அல்ல. இந்தியா உடனான மோதலில் 55 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் தாக்குதலுக்கு நாம் பதிலடி கொடுத்தோம்” என ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

இந்தியாவும் அணுசக்தி பலம் படைத்த நாடு என்பதால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் உலக நாடுகளை வருந்தச் செய்தது. இந்நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தன. போரை தாமே முடிவுக்குக் கொண்டுவந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in